BREAKING NEWS

சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருந்த அமெரிக்க விஞ்ஞானிகள்

சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவதை அமெரிக்க விஞ்ஞானிகளும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் 14-ந் தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது.

கடந்த மாதம் 20-ந் தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 2-ந் தேதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.

3-ந் தேதி மற்றும் 4-ந் தேதி என்று 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கி உள்ளது.

‘சந்திரயான்-2’ விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு நேற்று அதிகாலையில் நடந்தது. இந்த சரித்திர சாதனை நிகழ்வை, அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

நிலவின் சூழலியல் குறித்து அறிய, சந்திரயான்-2 மேற்கொள்ளும் பணிகள் உதவும் என்று அமெரிக்க விண்வெளி சமூகத்தினர் நம்புகின்றனர். சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நிமிடத்துக்கு நிமிடம் நாசா விஞ்ஞானிகளும் உன்னிப்பாக கவனித்தனர்.

பிரக்யான் என்று அழைக்கப்படும் ஆறு சக்கரங்கள் கொண்ட ரோவர் செல்லும், நிலவின் தென் துருவம், நிலவின் பரப்பில் மிகவும் முக்கியமான பகுதியாகும் என்று ஸ்பேஸ்.காம் என்ற இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ், ஹாலிவுட் திரைப்படம் இன்டெர்செல்லர் திரைப்படம் தயாரிக்கப்பட்ட செலவை விட குறைந்த செலவில் சந்திரயான்-2 விண்கலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.




Leave a Reply