BREAKING NEWS

சந்திரயான்-2 தரையிறங்க தயாராகிறது, லேண்டர் விக்ரம் 104 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வருகிறது

சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் சந்திரனில் சனிக்கிழமை அன்று தரையிறங்க ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-2 விண் கலம் ஜிஎஸ்எல்வி மார்க்3 ராக் கெட் மூலம் கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. அதன்பின் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து சந்திரயான் விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப்பாதை மாற்றப்பட்டது.

பலகட்ட பயணப் பாதை மாற்றத்துக்குப் பின்னர் தற்போது நிலவின் தரைப்பகுதியில் விண்கலத்தை இறக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. சந்திரயான் விண்கலத்தின் பாகங்கள் பிரிக்கப்பட்டு நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது.

நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலத்தின் இறுதி மற்றும் 5-வது கட்ட நீள்வட்டப்பாதை குறைப்பு நடவடிக்கையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஞாயிறன்று மேற்கொண்டனர். இதன் மூலம் நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 119 கி.மீ. தொலைவையும் அதிகபட்சம் 127 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வரும் வகையில் நிறுத்தப்பட்டது.

இதன் அடுத்தகட்டமாக சந்திரயான்-2 விண்கல ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டரைப் பிரிக்கும் நடவடிக்கை நேற்று முன்தினம் வெற்றிகரமாக நிறைவேறியது. தொடர்ந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விண்கலத்தை விலக்கி, அதன் வேகத்தை குறைத்து மெல்ல தரையிறங்கச் செய்யும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

செப்டமபர் 7-ம் தேதி லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரை இறக்க ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. மெல்ல நிலவின் மேற்பரப்பு நோக்கி நகரும் லேண்டர், நிலவில் தரையிறங்கியதும் அதில் இருந்து ரோவர் வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும்.

முன்னதாக லேண்டர் விக்ரமை சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலக்கி நிலை நிறுத்தும் பணிகள் இரண்டு முறை நடைபெற வேண்டும். இதில் முதல் விலக்கம் நேற்று அதிகாலை நடைபெற்றது. இந்த பணி சரியான முறையில் நடந்ததாகவும், தற்போது சந்திரனில் இருந்து 104 கிலோ மீட்டர் தொலைவுக்கு தனது தூரத்தை குறைத்து லேண்டர் விக்ரம் சுற்றி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.




Leave a Reply