BREAKING NEWS

சத்தியமங்கலத்தில் குடோனில் பதுக்கிய (கோவை) 225 கிலோ பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் – அதிகாரிகள் நடவடிக்கை.

 

பான்மசாலா பாக்கெட்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள வாரச்சந்தை பகுதியில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து ஈரோடு உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் 4 அலுவலர்கள் சத்தியமங்கலம் வாரச்சந்தை வளாகத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது வடக்குப்பேட்டையை சேர்ந்த கவுதம், ரவி ஆகிய இருவர் பாக்கு விற்பனை செய்யும் கடையில் தடை செய்யப்பட்ட பல்வேறு பிராண்டுகளில் உள்ள பான்மசாலா பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாக வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர்.

225 கிலோ பறிமுதல்

இந்த பான்மசாலா பாக்கெட்டுகள் எங்கு வாங்கப்பட்டது என விசாரித்தபோது வடக்குப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு குடோனிலிருந்து வாங்குவதாக தெரிவித்தனர். இதையடுத்து திப்புசுல்தான் சாலையில் சோனராம் என்பவருக்கு சொந்தமான கடையின் பின்புறம் உள்ள ஒரு குடோனில் பான்மசாலா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த 225 கிலோ பான்மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குடோன் உரிமையாளரை விசாரித்து வருகின்றனர். இதன் மதிப்பு ரு.2.25 லட்சம் ஆகும்.

இதுகுறித்து ஈரோடு உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி கூறுகையில், உணவு பாதுகாப்புத்துறைக்கென புகார் தெரிவிப்பதற்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் உள்ளது. இந்த வாட்ஸ்அப்பில் புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்கள், மற்றும் காலாவதியான உணவுப்பொருட்களை கண்டறிந்து பறிமுதல் செய்யப்படும் என்றார்.

2 காலம் படம் உள்ளது

சத்தியமங்கலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பான்மசாலா பாக்கெட்டுகளை படத்தில் காணலாம்.




Leave a Reply