தற்போதைய செய்திகள்

சட்ட நடைமுறைகளை ஆய்வு செய்து ராஜீவ் காந்தி கொலையாளிகளை,விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் பரபரப்பு பேட்டி….

கோவை,
சட்ட நடைமுறைகளை ஆய்வு செய்து ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோவையில் பேட்டி
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோவை சென்றார். அவர், கோவை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:

கேள்வி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அ.தி.மு.க. எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்களே?

பதில்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய இரண்டையும் 6 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். கடந்த 5 நாட்களாக நாடாளுமன்ற அவை முடங்கும் அளவுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

சட்ட நடைமுறைகள்
கேள்வி: ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களை மன்னித்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சிறையிலுள்ள அந்த 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்து கட்ட நடவடிக்கை என்ன?
பதில்: சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்கும். சிறையில் இருப்பவர்களை சட்டத்துக்கு புறம்பாக விடுதலை செய்ய முடியாது. சட்ட வழிமுறைகள் இருந்தால் ஆய்வு செய்து விடுதலை செய்ய வழி வகை செய்யப்படும்.
கேள்வி: குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் சொல்ல முடியுமா?
பதில்: அதை சொல்ல முடியாது. சட்டம் என்ன சொல்கிறதோ அதை செய்வோம்.

நமது நிலைப்பாடு
கேள்வி: காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவோம் என்கிறீர்களே? எந்த வகையில்?
பதில்: ஏற்கனவே உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. மத்திய அரசு நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்படவேண்டும் என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி மத்திய அரசு 6 வார காலத்துக்குள் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
நேற்று முன்தினம் கூட மத்திய அரசு 4 மாநில தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியது. அதில் தமிழகத்தின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம். உச்ச நீதி மன்றம் 6 வார காலத்திற்குள் இதனை அமைக்க வேண்டும் என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என தலைமை செயலாளர் தெளிவாக நமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
அரசியல் காரணம்
கேள்வி: காவிரி பிரச்சினையில் தமிழக அரசு உரிய முறையில் வாதாடவில்லை என வைகோ குற்றம்சாட்டி உள்ளாரே?
பதில்: தமிழகத்தின் சார்பில் 13 நாட்கள் வாதாடி உள்ளோம். அப்போது, ஏராளமான பாயிண்டுகள் எடுத்துவைக்கப்பட்டது. தீர்ப்பும் வந்து விட்டது. அரசியல் காரணங்களுக்காக குற்றம்சாட்டுவது சரியல்ல.
கேள்வி: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் கூறியிருந்தது போலவ, கமல்ஹாசனும் வலியுறுத்தி உள்ளாரே?
பதில்: எம்.பி.க்கள் தொடர்ந்து அவையில் குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கே இன்னும் தீர்வு கிடைக்க வில்லை. அரசியல் காரணங்களுக்காக குற்றம்சாட்டுவது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply