தற்போதைய செய்திகள்

சட்டசபையில் நாளை தமிழக பட்ஜெட் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்….

சென்னை,
தமிழக அரசின் 2018-2019-ம் ஆண்டிற்காக பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை (15-ந் தேதி) சட்டசபையில் தாக்கல் செய்கிறார். இதில், புதிய அறிவிப்புகள் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயக்குமார்-ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஒரு அணியாகவும், தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வந்த நிலையில், தமிழக அரசின் 2017-2018-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த ஆண்டு மார்ச் 16-ந் தேதி தமிழக சட்டசபையில் அன்றைய நிதி அமைச்சராக இருந்த மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரு அணிகளும் இணைந்து, ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு நிதித்துறையும் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் 2018-2019-ம் ஆண்டிற்கான பட்ஜெட் வரும் 15-ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

காலை 10.30 மணிக்கு
இதற்கான அறிவிப்பை தமிழக சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் கடந்த 7-ந் தேதி நேற்று வெளியிட்டார். அந்த அறிவிப்பில், ‘தமிழக சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை 15.3.2018-ம் நாள் வியாழன் (நாளை) காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். மேலும், அன்று காலை 10.30மணிக்கு 2018-2019-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பேரவைக்கு அளிக்கப்பெறும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

5 நாட்கள் விவாதம்
அதன்படி, நாளை மறுநாள் (15-ந் தேதி) கூடும் சட்டசபை கூட்டத்தில் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-2019-ம் ஆண்டிற்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்த பட்ஜெட்டில் அரசின் புதிய அறிவிப்புகள் இடம்பெறும். சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மீதான விவாதம் குறைந்தபட்சம் 5 நாட்கள் நடக்கும். விவாதத்திற்கு பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுவார்.

இந்த பட்ஜெட்டில், முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

——-

(பாக்ஸ்)

காவிரி விவகாரத்தில் சட்டசபை சிறப்பு கூட்டம் எப்போது?


காவிரி விவகாரத்தில்,காவிரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்கு முறை ஆணையத்தையும் 6 வாரத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துகிறது.

இந்நிலையில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில தலைமைச் செயலாளர்களுடன் கடந்த 9-ந் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இதில், மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்த எந்த முடிவையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதை கருத்தில் கொண்டு, சட்டசபையில் வரும் நாடளை பட்ஜெட் தாக்கல் முடிந்த பிறகு அன்றைய தினம் மாலையிலேயோ அல்லது மறுநாள் 16-ந் தேதியோ சட்டசபை சிறப்பு கூட்டத்தை நடத்தி காவிரி பிரச்னை குறித்து விவாதித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை சபாநாயகர் அறிவிப்பார் என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.
Leave a Reply