தற்போதைய செய்திகள்

சசிகலாவின் 68 சொத்துக்கள் பறிமுதல்

சசிகலாவின் 68 சொத்துக்கள் பறிமுதல்
விரைவில் ஆணை பிறப்பிக்க தமிழக அரசு முடிவு
சொத்து குவிப்பு வழக்கில் அபராதத்தை வசூல் செய்வதற்காக
சென்னை, மே 10-

சொத்து குவிப்பு வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டதால் உச்சநீதிமன்ற உத்தரவுபடி 6 மாவட்டங்களில் சசிகலாவுக்கு சொந்தமாக உள்ள 68 சொத்துகளை பறிமுதல் செய்வது குறித்து தமிழக அரசு விரைவில் புதிய அரசாணை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளது.

குற்றச்சாட்டு

ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சராக 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக்கள் வாங்கி குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சொத்துக் குவிப்பில் கூட்டு சதி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சுமார் 20 ஆண்டுகள் நடந்த அந்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் 4 பேரும் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

அபராதம்

ஆனால் ஜெயலலிதா 2016-ம் ஆண்டே இறந்து விட்டதால் அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா மற்ற 3 பேருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எப்படி வசூல் செய்வது என்ற சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்த கர்நாடகா மாநில அரசு, “ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தது.

சொத்துக்கள்

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிரடி நடவடிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு தொடங்கியது. முதல் கட்டமாக அவர்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கு, எவ்வளவு சொத்துக்கள் வாங்கி சேர்த்துள்ளனர் என்ற விபரங்களை சேகரித்தனர்.

அப்போது சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், நெல்லை, தஞ்சை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் ஏராளமான சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 128 சொத்துக்கள் ஏற்கனவே அரசாணைகள் மூலம் முடக்கி கையகப்படுத்தப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவு

முதலில் அந்த சொத்துக்கள் அனைத்தும் தற்காலிகமாக கையகப்படுத்தப்பட்டிருந்தது. அந்த 128 சொத்துக்களில் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்து அரசுக்கு சொந்தமானதாக மாற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த 68 சொத்துக்களும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், நெல்லை, தஞ்சை, நீலகிரி மாவட்டங்களில் மிக முக்கியமான இடங்களில் இருக்கின்றன.

நீதிமன்ற உத்தரவின் படி கடந்த ஆண்டே ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரின் 68 சொத்துக்களையும் ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த நடவடிக்கையை மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை செய்தது. ஆனால் அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. இதுபற்றி சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் 68 சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசுடமையாக்க தற்போது அதிரடி நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

அதிகாரிகள் ஆய்வு

அந்த 68 சொத்துக்களையும் பறிமுதல் செய்த பிறகு அது, ரூ.100 கோடி அபராதத்துக்கு ஈடுகட்டப்படுமா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளது. ரூ.100 கோடி அபராதத்தை ஈடுகட்ட அவை பறிமுதல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. 68 இடங்களையும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்த ஆய்வுப் பணிகள் எப்போது நிறைவு பெறும் என்று தெரியவில்லை.

ஆய்வுப் பணிகள் முடிந்ததும் 68 சொத்துக்களையும் பறிமுதல் செய்வதற்கான அரசாரணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும். அதன்பிறகு அந்த 68 சொத்துக்களும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் இருந்து தமிழக அரசின் கைக்கு வந்து விடும். பறிமுதல் நடவடிக்கை முழுமையாக முடிந்த பிறகு அதுபற்றி தமிழக அரசு நீதிமன்றத்தில் முறைப்படி தெரிவிக்கும். அதன் பிறகு ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதம் தொகையை எப்படி வசூலிப்பது என்பது பற்றி தெரிய வரும்
Leave a Reply