BREAKING NEWS

கோவை, நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

பருவமழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையும் மழை தொடர்ந்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். அடிக்கடி மின்சாரம் தடை படுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். பலத்த மழை மற்றும் கடும் குளிர் காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை பெரிதும் குறைந்தது.

ரெயின் கோட்

இதனால் சுற்றுலா தலங்களான ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனையம், ரோஜா பூங்கா உள்ளிட்டவைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ரோடுகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லை.

தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பெரிதும் சிரமப்பட்டனர். அவர்கள் குடை பிடித்தபடியும், ரெயின் கோட் அணிந்தபடியும் சென்றனர்.

மண் சரிவு

ஊட்டி- கோத்தகிரி சாலையில் ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினார்கள். ஆங்காங்கே சிறிய மரங்கள் விழுந்தது. இதனை தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தினார்கள்.

பில்லூர் அணை

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியது. இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 100 அடியாகும். அணைக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் பாதுகாப்பு கருதி அதே அளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 96.25 அடி தண்ணீர் உள்ளது. நேற்று மாலை 3 மணி நிலவரப்படி அணைக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று 6 ஆயிரம் கன அடியாக குறைந்து விட்டது.

குற்றால அருவி

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தென்காசியில் அதிகபட்சமாக 15 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் நேற்று மாலை முதல் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று காலை ஓரளவு தண்ணீர் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதுபோல பழையகுற்றால அருவி, புலியருவி உள்பட அனைத்து அருவிகளிலும் நன்றாக தண்ணீர் விழுந்தது.

பாபநாசம்

பாபநாசம் அணைப் பகுதியில் நேற்று காலை வரை 1 மில்லிமீட்டர் மழையே பதிவாகி இருந்தது. ஆனாலும் அணைக்கு வினாடிக்கு 628 கனஅடி தண்ணீர் வந்தது. கீழ்அணையில் இருந்து 275 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து நேற்று 67.50 அடியாக இருந்தது. சேர்வலாறு அணைப்பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைக்கு வினாடிக்கு 693 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து நேற்று 113.35 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு

மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 412 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 45 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் சற்று கூடி நேற்று 83.90 அடியாக இருந்தது. கடனாநதி அணைநீர்மட்டம் 61.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 71 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 71.20 அடியாகவும் நேற்று உயர்ந்துள்ளது.

அடவிநயினார் அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து நேற்று 109 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு மற்றும் நம்பியாறு அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கிறது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே கொடுமுடியாறு அணை நிரம்பி வழிகிறது. அங்கு முழுகொள்ளளவான 52.50 அடி தண்ணீர் உள்ளது.




Leave a Reply