BREAKING NEWS

கோதபயவின் குற்றப் பின்னணி..!

ஈவிரக்கமற்ற கொலை வெறியரான கோதபய ராஜபக்ச இலங்கையின் அதிபரானால் என்னென்ன நடக்குமென்று அஞ்சினோமோ, அத்தனையும் அசுரவேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. தமிழர் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவம் ரோந்து போகிறது. பெயர்ப்பலகைகளிலிருந்து தமிழ் தொலைந்து போகிறது.

கோதபய அதிபரானால், அவர் சம்பந்தப்பட்ட கொலைகளை விசாரித்துவந்த சி.ஐ.டி. அதிகாரி நிஷாந்த சில்வா என்ன ஆவார் – என்கிற கேள்வியும் முடிவுக்கு வந்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன் சில்வா தனது மனைவி மக்களோடு இலங்கையிலிருந்து  வெளியேறிவிட்டார்.

கோதபயவின் கொலைவெறி, தமிழின அழிப்புடன் நின்று விடவில்லை. லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலிகொட என்று சிங்களச்  சமூகத்தின் மீதும் பாய்ந்தது. இருவரும் பத்திரிகையாளர்கள். இருவருமே தமிழின அழிப்பை அவரவர் பாணியில் கண்டித்தவர்கள்.

உலகில் தன் நாட்டு மக்கள் மீதே விமானத்திலிருந்து குண்டு வீசுகிற ஒரே நாடு என்னுடைய இலங்கைதான் என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது – என்று  வேதனையோடு குறிப்பிட்டவர், சன்டே லீடர் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த.

இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழ் மக்களைத் தாக்க ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை அம்பலப்படுத்தியவர், பத்திரிகையாளரும் கேலிச்சித்திரக்காரருமான பிரகீத்.

லசந்த, பிரகீத் இருவரையும், கோதபயவின் ரகசிய ராணுவக் கொலைக்குழு குறிவைத்துத் தாக்கிக் கொன்றது. அதே கொலைக்குழுவால் தாக்கப்பட்ட ‘ரிவிர’ சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் உபாலி தென்னகோன், THE NATION ஆங்கிலப் பத்திரிகையின் உதவி ஆசிரியர் கீத் நொயார், பத்திரிகையாளர் நாமல் பெரேரா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

கோதாவின் கொலைக் குழுவால் கொழும்பு நகரில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் என்ன ஆனார்களென்று தெரியவேயில்லை. அவர்கள் உயிருடன் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், கோதாவின் கைத்தடியாகச் செயல்பட்ட கடற்படை உயர்  அதிகாரிகள், அந்த இளைஞர்கள் கொல்லப்பட்டதை மூடி மறைத்தனர்.

இலங்கையையே அதிரச் செய்த இன்னொரு கொலை, அந்த நாட்டின் தேசியக் கதாநாயகனாகவே திகழ்ந்த ரக்பி விளையாட்டு வீரன் வாசிம் தாஜுதீனின் கொலை. ராஜபக்சவின் குடும்பத்துக்கு அதில் நேரடித் தொடர்பு இருந்தது. அதை மூடி மறைத்துவிட்டு, ‘தாஜுதீன் விபத்தில் இறந்தார்’ என்று அறிவிக்கப்பட்டது.

இந்தக் கொலை வெறித் தாக்குதல்கள் அனைத்தும், மகிந்த ராஜபக்ச அதிபராகவும், கோதபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்த போது நடந்தவை.

இந்தக் கொலைவெறித் தாக்குதல்களின் பின்னணியில் கோதபய ராஜபக்ச இருப்பதாக ஒவ்வொரு முறையும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஒவ்வொரு முறையும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படுமென்றும் குற்றவாளிகள் மீது சட்டம் பாயுமென்றும் மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார். ஆனால், ஒருமுறை கூட, சட்டம் குற்றவாளிகள் மீது பாயவேயில்லை.

“மகிந்த! என் கொலைகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படுமென்று நீ ஆரவாரமாக அறிவிப்பாய்…

ஆனால், அந்த விசாரணை, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கும்…’’ – இது லசந்தவின் மரண சாசனத்தில் உள்ள வாசகம்.

உண்மையிலும்  அதுதான் நடந்தது. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதே விசாரணைகளின் நோக்கமாக இருந்தது. விசாரணை என்கிற பெயரில், அனைத்துத் தடயங்களும் அழிக்கப்பட்டன.

லசந்த முதல் தாஜுதீன் வரையிலான அனைத்து முக்கிய வழக்குகளிலும் முறைப்படி விசாரணை நடத்தப்படும் – என்று வாக்குறுதி அளித்துத்தான் 2015-ல் மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி அதிபரானார், மைத்திரிபாலா. அப்போது இந்த வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட சி.ஐ.டி. பொறுப்பதிகாரிதான் நிஷாந்த சில்வா.

கோதபய குழுவின் கொலைவெறித் தாக்குதல்கள் குறித்து நிஷாந்த சில்வா விசாரிக்கத் தொடங்கிய போது, அநேகமாக அனைத்துத் தடயங்களும் ஆதாரங்களும் அழிக்கப்பட்டிருந்தன.

ஆனால், சில்வாவின் புலனாய்வுத் திறன், நிலைமையைத் தலைகீழாக மாற்றியது. புதைக்கப்பட்ட பிணங்களுடன் சேர்த்து, மறைக்கப்பட்ட உண்மைகளையும் அவர் தோண்டியெடுத்தார். அறிவியல் பூர்வமான ஆதாரங்களைத் தேடிப் பிடித்தார். கோதபயவின் கைத்தடிகள் கைது செய்யப்பட்டனர். கொலைவெறியர் கோதபய அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.

கைத்தடிகள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்ட நிலையில், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மைத்திரிபாலாவை கோதா அணுகியதும், அவரைக்  காப்பாற்றுவதன் மூலம் ராஜபக்சக்களின் ஆதரவுடன் மீண்டும் அதிபராகி விடலாம் என்கிற நப்பாசையில் மைத்திரிபாலா உதவிக்கரம் நீட்டியதும் சென்ற ஆண்டு இறுதியில் நடந்த சம்பவங்கள்.

மைத்திரிபாலாவின் பதவி ஆசை, சில்வா என்கிற நேர்மையான அதிகாரியின் பதவிக்கு உலை வைப்பதில் போய் முடிந்தது. ஆனால், சர்வதேசத்தின் தலையீடு சில்வாவைக் காப்பாற்றியது. அந்த சில்வாதான் இப்போது, தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்டிருக்கிறார். 3 மகள்கள் மற்றும் மனைவியுடன் இலங்கையிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

கோதபய ராஜபக்ச அதிபரானவுடன், சி.ஐ.டி. உயரதிகாரி ஷானி அபே சேகர பதவியிறக்கம் செய்யப்பட்டார். அவருக்கும் நிஷாந்த சில்வாவுக்கும் தரப்பட்டிருந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. என்ன நடக்குமென்பதை சில்வாவால் யூகித்திருக்க முடியும். அவர், வெளிநாட்டுத் தூதுவர்களின் உதவியுடன் வெளியேறியதாக நம்பப்படுகிறது.

நிஷாந்த சில்வா, சுவிட்சர்லாந்துக்குப் போயிருப்பதாகச் சொல்லப்படுவதுதான் கோதபயவின் இப்போதைய தலைவலி. சில்வா இலங்கையில் இருப்பதைக் காட்டிலும், சுவிஸில் இருப்பதுதான் கோதாவுக்கு ஆபத்து. கோதபயவுக்கு இது தெரியும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் ஜெனிவாவில் இருப்பதுதான், அவரது தலைவலிக்குக் காரணம்.

தனது குற்றங்களை அம்பலப்படுத்தப் பார்க்கும் எவரையும் கொலை செய்யத் தயங்காத  ‘கொலை வெறியர்’ கோதபய. இப்போது, அந்தக் கொலைவெறியரே அதிபர், அவரது அண்ணனே பிரதமர் என்கிற நிலையில், எங்கே இருந்தாலும் சில்வா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இது சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கப்பார்த்த ஒரு கொலைவெறியருக்கும், சட்டப்படி குற்றவாளியைக் கூண்டில் ஏற்ற முயன்ற ஒரு நேர்மையான அதிகாரிக்கும் நடக்கிற யுத்தம். புத்தனாகவே தன்னைக் காட்டிக்கொள்ள முயலும் ஒரு கள்ளப் புத்தனிடம் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுகிற பொறுப்பை ஒப்படைத்திருக்கிற சிங்கள இலங்கை இந்த உண்மையை உணர வாய்ப்பேயில்லை.

இந்தியாவோ, கொலைவெறியர் கோதபயவுக்கு, ரத்தினக் கம்பளம் விரித்துக் கொண்டிருக்கிறது. இந்திய ராணுவம், அந்தக் கொலை வெறியருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்துகிற கொடுமையெல்லாம் அரங்கேற இருக்கிறது. இந்த அளவுக்கு அந்த அதிபருக்கு மரியாதை கொடுத்தாலும், அந்த நபர் ஒரு கொலைவெறியர் என்கிற உண்மையை உணரவும் உணர்த்தவும் இந்தியா தவறக் கூடாது.

கோதபய ஒரு நாட்டின் அதிபர் என்பதை யாராலும்  மறுக்க முடியாது. அதேசமயம், அவர் கொலை வெறி பிடித்தவர் என்பதை மூடிமறைக்க இந்தியாவும் சர்வதேசமும் துணைபோகக் கூடாது.

நிஷாந்த சில்வா என்கிற நேர்மையான அதிகாரி உலகின் எந்த மூலையில் இருந்தாலும், உரிய பாதுகாப்பு வழங்க சர்வதேசம் முன்வர வேண்டும். லசந்தவுக்கும் பிரகீத்துக்கும் தாஜுதீனுக்கும் நடந்தது சில்வாவுக்கு நடந்துவிடக் கூடாது.

கோதாவின் ரகசியக் கொலைக்குழு செய்த ஒவ்வொரு கொலையிலும், சில்வா எப்படித் துப்புத் துலக்கினார் என்பதைத் தெரிந்துகொண்டால்தான், சில்வாவை முழுமையாக அறிய முடியும். லசந்த கொலையிலிருந்து அதை ஆரம்பிக்க வேண்டும்.

இலங்கை விமானப் படைக்கு Second hand விமானங்களை (MIG)  வாங்குவதற்கான பேரத்தில் கோதபய கோஷ்டி எப்படிக் கொள்ளையடித்தது என்பதை அம்பலப்படுத்தியதுதான், லசந்த செய்த குற்றம். உண்மையைச் சொல்ல வேண்டும் –  என்கிற அவரது நேர்மை தான், கொலைவெறி பிடித்த கோதபயவுக்கு ஆத்திரமூட்டியது..!

– புகழேந்தி தங்கராஜ்,

தொடர்புக்கு: pugazendhithangaraj@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *