BREAKING NEWS

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நீர் வீண்

நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்குச் செல்கிறேன் என்று கூறும் முதலமைச்சர், கொள்ளிடம் ஆற்றிலிருந்து கடலில் கலந்து வீணாகும் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் பற்றி கவலைப்படாதது வேதனையளிக்கிறது. கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மேட்டூருக்கு வந்த காவிரி நீர், இன்னும் காவிரி டெல்டாவில் பல இடங்களில் கடைமடைக்குப் போய்ச் சேரவில்லை.

கொள்ளிடத்தில் கடந்த வருடம் 100 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் கடலில் வீணாகப் போய் கலந்தது. இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்பட வேண்டிய தண்ணீர் பயனற்றுப் போகிறது.

கொள்ளிடம் ஆறு

ஜெயலலிதா கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்க நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையில் 480 கோடி ரூபாயில் கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டத்தை அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேலாகியும், தடுப்பணைகள் கட்டுப்படவில்லை. கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை. அந்தத் தொழில்நுட்பங்கள் அறிந்த பொறியாளர்கள் தமிழகப் பொதுப்பணித்துறையில் இருக்கிறார்கள்.

ஆனால் அதுபற்றியோ, கடலில் கலக்கும் காவிரி நீரை வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்த தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றுவதிலோ எடப்பாடி பழனிசாமிக்கு அக்கறை இல்லை. விவசாயிகளுக்கு சாதகமான திட்டங்களை, மண்ணைப் போட்டு மூடுவதிலேயே முதலமைச்சர் கவனமுடன் செயல்படுகிறார். நீர் மேலாண்மையில் அ.தி.மு.க அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. பொதுப்பணித்துறையில் பல பொறுப்புகளுக்கு பொறியாளர்கள் நியமிக்கப்படாமல் காலியாக கிடக்கின்றன. பிறகு எப்படி பணிகள் நடக்கும்?

தடுப்பணை கட்ட வேண்டும்

குடிமராமத்துப் பணிகள் என்று கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி, அ.தி.மு.க.வினர் கமிஷன் அடிக்கும் பணி நடக்கிறது. அதற்கு உடன்படாத பொறியாளர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் குடங்களை தூக்கி, இரவு பகலாக அலைந்த தாய்மார்கள், காவிரி நீர் கடலில் கலப்பதைப் பார்த்து கண்ணீர் சிந்தும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனவே, காவிரி நீரைச் சேமிப்பதற்கும் நன்கு பயன்படுத்துவதற்கும் உரிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அறிவித்த கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டங்களை, உடனடியாக நிறைவேற்றி கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும். ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது விரைந்து நிறைவேற்றிட முன்வந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply