BREAKING NEWS

கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் வரத்து அதிகரிப்பு, வீராணம் ஏரி நிரம்புகிறது – சென்னை குடிநீர் வாரியம் தகவல்.

 

கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் வரத்து அதிகரிப்பால், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியில் நேற்று 416 மில்லியன் கனஅடிநீர் இருப்பு உள்ளதாக, சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னை நகரத்திற்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் வீராணம் ஏரியும் ஒன்று. இந்த வீராணம் ஏரி, கடலுார் மாவட்டத்தில் உள்ளது. கோடை வெயிலால், வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. கடந்த சில மாதங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையால், காவிரி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், மேட்டூர் மற்றும் கொள்ளிடம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பு

இதற்கிடையே கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் வரத்தால் வீராணம் ஏரி நிரம்பி வருகிறது. அதன்படி, சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியில் தற்போது 1.8.2018 நிலவரப்படி 416 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. வழக்கமாக சென்னை நகருக்கு வீராணம் ஏரியிலிருந்து 650 எம்.எல்.டி., தண்ணீர் வினியோகிக்கப்படும்.

ராட்சத குழாய் பராமரிப்பு

தற்போது 180 எம்.எல்.டி., தண்ணீரை வீராணம் ஏரியிலிருந்து விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, சேத்தியாதோப்பு முதல் வடகுத்து சுத்திகரிப்பு நிலையம் வரை உள்ள குடிநீர் வினியோகிக்கும் ராட்சத குழாய்களில் சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது.

180 எம்.எல்.டி., தண்ணீர்

இப்பணியை நேற்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய நிர்வாக இயக்குனர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார். இப்பணி 3 முதல் 4 நாட்கள் வரை நடைபெற உள்ளது. சுத்தம் செய்யும் பணிகள் நிறைவடைந்ததும் வீராணம் ஏரியலிருந்து சென்னை நகருக்கு 180 எம்.எல்.டி., தண்ணீர் வினியோகிக்கப்பட உள்ளது.




Leave a Reply