‘‘நான் கொல்லப்பட்டால், அதன் பின்னணியில் அரசுதான் இருக்கும்…’’ – லசந்த இப்படி எழுதியது, 2009 ஜனவரி முதல் வாரத்தில்! அந்த மையின் ஈரம் காய்வதற்குள், ஜனவரி 8-ம் தேதி அவர் கொல்லப்பட்டார். அவரது காரைப் பின்தொடர்ந்து ராணுவ மோட்டார் சைக்கிள்களில் வந்த கொலையாளிகள், நடுத்தெருவில் அவரைத் தாக்கிக் கொன்றனர்.
மிக் பேர ஊழலை அம்பலப்படுத்திய லசந்தவிடம் 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு கோதா தொடுத்த வழக்கு விசாரணைக்கு வர இரண்டே நாள் இருந்த நிலையில், அந்தக் கொலை நடந்தது. ‘கோத்தபய பத்து பைசாவுக்குக் கூட பெறுமதி இல்லாதவர் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க இது நல்ல வாய்ப்பு’ என்று சொன்ன லசந்த, வழக்கைச் சந்திக்கத் தயாராக இருந்த நிலையில் கொல்லப்பட்டார்.
கொலையாளிகள் வந்த மோட்டார் சைக்கிள்களின் எண்களை, அந்தப் பதற்றமான சூழ்நிலையிலும் தன் குறிப்பு நோட்டுப் புத்தகத்தில் பதிவு செய்தார் லசந்த. அந்த நோட்டுப் புத்தகம், கோத்தபயவுக்குக் கொத்தடிமைகளாக இருந்த காவல்துறை அதிகாரிகளால் மறைக்கப்பட்டது.
லசந்தவைக் கொன்றது விடுதலைப் புலிகள்தான் என்று இட்டுக்கட்ட கோதாவின் கூலிப்படை முயன்றது. வவுனியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள், கொலை நடந்த இடத்துக்கு அருகில் “கண்டுபிடிக்கப்பட்டது”. அதுதான் கொலையாளிகள் வந்த வாகனம் என்று அறிவிக்கப்பட்டது.
அந்தப் போலித் தடயத்தின் நதிமூலத்தை மூடி மறைப்பதற்காக, அந்த மோட்டார் சைக்கிளில் வவுனியா அருகே போய்க்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களைப் பிடித்து, உயிரோடு எரித்துக் கொன்றது கோதாவின் கொலைக் குழு.
லசந்தவின் மகள் அகிம்சா, இந்த அநீதியை வெளிப்படையாகக் கண்டித்தார். ‘அப்பாவைக் கொன்றவர்களைக் காப்பாற்றுவதற்காக இரண்டு அப்பாவித் தமிழ் இளைஞர்களை உயிருடன் எரித்துக் கொன்றது என்ன நியாயம்’ என்று கேட்டார் அவர்.
நிஷாந்த சில்வாவின் புலனாய்வுப் பணிக்கு ஏகப்பட்ட தடைகள். எல்லாத் தடைகளையும் உடைத்து, லசந்த வழக்கில் படிப்படியாக முன்னேறினார், அவர். கொலையாளிகளின் மோட்டார் சைக்கிள் எண்களை லசந்த பதிவு செய்த குறிப்பு நோட்டுப் புத்தகம், கோதா கோஷ்டியால் காணாமலாக்கப் பட்டிருப்பதை நீதிமன்றத்தில் நிரூபித்தார்.
லசந்த சுட்டுக் கொல்லப்பட்டார் – என்கிற காவல்துறையின் தகவல் பொய்யானது என்பதையும், உண்மையில் அவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபித்தார்.
கோத்தபயவின் ரகசியக் கொலைக்குழு உறுப்பினர்களில் பலர், சில்வா அகழ்ந்தெடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
கார்ட்டூனிஸ்ட் மற்றும் பத்திரிகையாளரான பிரகீத் கொலை வழக்கிலும், அனைத்துத் தடயங்களும் அழிக்கப்பட்டிருந்தன. அவற்றையும் அறிவியல் பூர்வமாக மீட்டெடுத்தார் சில்வா. பிரகீத்தைக் கடத்திய கடற்படை வாகனத்துக்கு எங்கே எரிபொருள் நிரப்பப்பட்டது என்பதைக் கூட துல்லியமாகக் கண்டறிந்தார்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறைக்கு அருகேயுள்ள அக்கரைப்பற்று கடலில் தான் பிரகீத் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதையும், கொழும்பிலிருந்து அவரைக் கடத்திச் சென்றவர்கள் யார் யார் என்பதையும், கோத்தபய தொடர்பான கேலிச் சித்திரங்களை வரைந்ததனாலேயே அவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதையும் அழுத்தந் திருத்தமாக நிரூபித்தார் சில்வா.
சில்வாவின் ஆதாரங்கள் அசைக்க முடியாதவையாக இருந்ததால், பிரகீத் கொலையில் தொடர்புடைய கோத்தபயவின் கைத்தடிகள் கைது செய்யப்பட்டனர்.
ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் கொலையில், மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்சவுக்கு நேரடித் தொடர்பு இருந்தது.
தந்தையின் பதவி நிழலில் வளர்ந்த யோசித்த, அந்தத் தகுதியுடன் இலங்கையின் ரக்பி விளையாட்டு அரங்கில் காலூன்றப் பார்த்தார். உண்மையான வீரனான தாஜுதீன் போன்றவர்கள் இந்த அரசியல் திணிப்பை விரும்பவில்லை. இது போதாதென்று, யோசித்தவின் காதலி யாசராவை முதலில் காதலித்தவர் தாஜுதீன் தான் என்கிற வதந்தி வேறு விரோதத்தை வளர்த்தது.
ஒரு நள்ளிரவில், அதிவேகத்தின் காரணமாக தாஜுதீன் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும், கார் தீப்பிடித்து எரிந்ததில் அவர் உடல் கருகி இறந்ததாகவும் செய்தி பரவியபோது அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். தாஜுதீனையும் யோசித்தவையும் அறிந்தவர்கள், அது ஒரு திட்டமிட்ட கொலை என்றனர்.
இந்த வழக்கிலும் சில்வாவின் புலனாய்வுத் திறன்தான், உண்மையை வெளிக்கொண்டு வந்தது.
தாஜுதீன் காரை வேகமாக ஓட்டியதால்தான் விபத்து நேர்ந்தது – என்று காவல்துறையினர் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். அது கடைந்தெடுத்த பொய் என்பதை, விசாரணையைத் தொடங்கியவுடனேயே சில்வா அறிந்தார்.
காவல்துறையினர் சொல்வது பொய் என்பதை உணர்த்துகிற வலுவான ஆதாரமாக இருந்தது, அந்தக் காரில் தாஜுதீன் உடல் இருந்த இடம். அவரது கருகிய உடல், டிரைவர் இருக்கையில் இல்லாமல், பயணிகள் இருக்கையில் இருந்தது. அத்துடன் நில்லாமல், காரில் தாஜுதீன் இருந்த இருக்கை மட்டுமே எரிந்திருந்தது. மற்ற பகுதிகள் பத்திரமாக இருந்தன.
தாஜுதீனின் உயிரற்ற உடல் காரில் வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கிறது – என்பது தெளிவாகிவிட்ட நிலையில், ‘தாஜுதீன் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார்’ என்கிற தகவல், அப்பட்டமான பொய் என்பதை உணர்ந்தார் சில்வா.
ஒரு கொலையை விபத்தாகக் காட்ட முயன்றவர்கள் யார் – என்கிற கேள்விக்கு விடை கூறுவதாக இருந்தது, சம்பவம் நடந்த நள்ளிரவில் அந்தப் பகுதியில் தென்பட்ட லேண்ட் ரோவர் கார் ஒன்றின் நடமாட்டம். அது. யோசித்த ராஜபக்ச பயன்படுத்தி வந்த கார்.
தாஜுதீன் மரண மர்மம் தொடர்பான சில்வாவின் தொடர் விசாரணைகள், அதன் பின்னணியில் அதிபர் மாளிகை இருப்பதை உறுதி செய்தன. வாசிம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
சம்பவம் நடந்த இடத்துக்கு முன்னதாக ஓரிரு மைல் தொலைவில் தாஜுதீனின் மணிபர்ஸை சாலையில் கண்டெடுத்த ஒருவர், அதை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்ததிலிருந்து, என்ன நடந்திருக்கிறதென்பதை எளிதில் யூகிக்க முடிந்தது.
கொலை வெறித் தாக்குதலுக்கு இலக்காகிக் காரில் கடத்தப்பட்ட தாஜுதீன், தனது மணிபர்ஸை காருக்கு வெளியே எறிந்ததன் மூலம் ஒரு ஆதாரத்தை விட்டுச் செல்ல முயன்றிருக்கிறார் என்பதை எவராலும் எளிதில் யூகிக்க முடியும்.
தாஜுதீன் வழக்கு தொடர்பாக, மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தியை விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டது. யோசித்த பயன்படுத்திய லேண்ட்ரோவர் கார், ஷிராந்தியின் அறக்கட்டளைக்குச் சொந்தமான கார். ஆனால், ‘என்னை விசாரணைக்கு அழைத்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று பிளாக் மெயில் செய்தார் ஷிராந்தி.
லசந்த, பிரகீத், தாஜுதீன் மூவரது கொலை தொடர்பாகவும், உபாலி முதலான பத்திரிகையாளர்கள் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல்கள் தொடர்பாகவும், கடற்படையால் கடத்தப்பட்டபின் காணாது போன 11 கொழும்பு இளைஞர்கள் தொடர்பாகவும் நிஷாந்த தலைமையில் சி.ஐ.டி. நடத்திய விசாரணைகளுக்கு, மைத்திரிபாலா அரசு சகலவிதத்திலும் முட்டுக்கட்டை போட்டது.
காவல்துறை, ராணுவம் மற்றும் அரசுத் துறைகளிலிருந்து வழக்கு தொடர்பான தகவல்களைப் பெற, ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களைத் தான் சில்வா நாட வேண்டியிருந்தது.
அவ்வளவு அழுத்தங்களுக்கிடையே, அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்ட அரிதினும் அரிதான வழக்குகளில் சில்வாவின் புலனாய்வுக் குழு முன்னேறிச் சென்றது. காவல்துறை, ராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கடற்படையைச் சேர்ந்த கோத்தபய ராஜபக்சவின் கைத்தடிகளில் பலர், சில்வா குழு சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
கோத்தபயவின் கொலை வெறிதான் அநேகக் குற்றங்களுக்குப் பின்னணியாக இருந்தது என்பதை வழக்கு விசாரணை விவரங்கள் தெளிவாக்கின. அடுத்த இலக்கு தான்தான் என்பதை உணர்ந்ததால், தனது கைத்தடிகளைச் சிறையிலிருந்து மீட்க சகல விதங்களிலும் கோத்தபய முயன்றார்.
சில வழக்குகளில், கோத்தபயவுக்கு நெருக்கமான பௌத்த தேரர்கள் நீதிமன்றங்களுக்கு உள்ளேயே நுழைந்து எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி, நீதிபதிகளை அச்சுறுத்தினர். சில வழக்குகளில், அதிபர் மைத்திரிபாலா மூக்கை நுழைத்தார். “நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்த ராணுவத்தினரை இன்னும் எவ்வளவு காலம்தான் விசாரணைக் கைதியாக வைத்திருப்பீர்கள்” என்று நீதிபதிகள் இருந்த மேடையிலேயே சட்ட விரோதமாகப் பேசினார். அதன் விளைவாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட ஒவ்வொரு வழக்கிலும், ‘அடுத்தது கோத்தபயதான்’ என்றே எதிர்பார்க்கப்பட்டது. கோத்தபயவோ, மைத்திரி என்கிற கைப்பிள்ளையை வைத்து, கைது செய்யப்பட்டவர்களையும் வெளியிலெடுத்துக் கொண்டிருந்தார்.
கொலைகளின் சூத்திரதாரியாக இருந்தது, சட்டப்படி குற்றம். அந்தக் கொலைகளை மூடி மறைக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியது தண்டனைக்குரிய குற்றம். கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட கைக்கூலிகளை விடுவிக்க, ஒரு பொம்மை அதிபரைப் பயன்படுத்தியது அதைக்காட்டிலும் கடுமையான குற்றம். இவ்வளவையும் செய்த கோத்தபய என்கிற கொலைவெறியரால்தான், இலங்கையின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியுமென்று சிங்கள இனம் நினைக்கிறதே… இது தான் மன்னிக்கவே முடியாத குற்றம்.
கொலை வெறியர் – என்பதற்கு இலக்கணமாகவே திகழ்கிற கோத்தபய ராஜபக்ச அதிபராகவே ஆகிவிட்ட நிலையில், நிஷாந்த சில்வா போன்ற ஒரு நேர்மையான அதிகாரி இலங்கையிலிருந்து வெளியேறியிருப்பது இயல்பான ஒன்று. இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.
ஏற்கெனவே, லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா, சகோதரர் லால் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குடும்பமும் இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டது. ‘லசந்த குடும்பத்தில் அத்தனைப் பேரும் இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டனர். லசந்தவின் பிணம் மட்டும்தான் இலங்கையில் இருக்கிறது’ என்று கோத்தபய என்கிற கொலைவெறியர் ஈவிரக்கமில்லாமல் பேசியது, இலங்கையின் கறுப்பு வரலாறு.
பிரகீத்தின் மனைவி சந்தியா, அச்சத்துடனேயே கொழும்பில் வசிக்கிறார். கோத்தபய ஆதரவாளரான ஒரு பௌத்த தேரர் நீதிமன்ற வளாகத்திலேயே தன்னைப் பார்த்துச் சொன்ன ஒரு சிங்கள வசைச் சொல், அவரது இதயத்தில் வடுவாகவே பதிந்து விட்டது.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் லசந்தவின் மகள் அகிம்சாவுக்கு, சென்ற ஆண்டு கோத்தபய ‘இலங்கைக்கு வா’ என்று பகிரங்க அழைப்பு விடுத்தார். “உன் தந்தையைக் கொன்றவர்கள் யாரென்பது எனக்குத் தெரியும்… நீ கொழும்பு வந்தால், யாரென்பதைச் சொல்கிறேன்” என்று ஆணவத்துடன் அழைத்த கோத்தபயவுக்கு அகிம்சா அளித்த பதில், மிக மிக முக்கியமானது.
“என் தந்தை வழக்கில் நான் விசாரணை அதிகாரியல்ல! அந்த வழக்கை விசாரிக்கும் நிஷாந்த சில்வாவின் சி.ஐ.டி. குழுவை அணுகி, உங்களுக்குத் தெரிந்த உண்மையை உடனடியாகத் தெரிவியுங்கள். கொலைக் குற்றவாளிகள் யாரென்பதை அறிந்த ஒருவர், காவல்துறையிடம் அதைத் தெரிவிக்காமலிருப்பது சட்டப்படி குற்றம்” என்று, ஆஸ்திரேலியாவிலிருந்து கோத்தபயவுக்குப் அறிவுரை கூறியிருந்தாள் அந்த இளம் பெண்.
ஆஸ்திரேலியாவிலிருந்தாலும், தந்தைக்கு நீதி பெற தொடர்ந்து முயல்கிறார் அகிம்சா. தம்பியின் கொலைக்கு நீதி கேட்கிறார், லால் விக்கிரமதுங்க. கணவரின் கொலைக்கு நீதி கேட்டு, சர்வதேச அரங்குகள் அனைத்திலும் குரல் கொடுக்கிறார் சந்தியா. இந்த வழக்குகளில் உண்மைக் குற்றவாளியை நெருங்கிய நிஷாந்த சில்வா, உலகின் எந்த மூலையில் இருந்தாலும், தனது கடமையை மறக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.
சில்வா என்கிற திறமை வாய்ந்த துப்பறிவாளனிடம் தனது கொலைவெறியை அம்பலப்படுத்தும் ஆதாரங்கள் இருப்பதை கோத்தபய என்கிற கொலை வெறியர் விரும்ப வாய்ப்பேயில்லை. கோத்தபயவின் PAST HISTORY-யைப் பார்க்கிறபோது, எங்கேயிருந்தாலும் சில்வா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்கிற அச்சம் படர்ந்த விருப்பம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
கொலைக் குற்றப்பின்னணியுடனும், செய்த கொலைகளை மறைக்கும் சூழ்ச்சித் திறனுடனும் நடமாடுகிற ஒருவரைத்தான் இந்தியா வரவேற்கப் போகிறது. இப்படியொரு கைதேர்ந்த கொலை வெறியரைக் கையாள்வதில் இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நட்பு நாடு என்கிற பார்வையில் இடுப்புத் துணியையும் இழந்துவிடக் கூடாது.
– புகழேந்தி தங்கராஜ்,
தொடர்புக்கு: pugazendhithangaraj@gmail.com