BREAKING NEWS

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிப்பு நிலைமையை ஆராய்ந்து வருவதாக அமெரிக்கா தகவல்

வடகொரியா திடீரென அடுத்தடுத்து நடத்தியுள்ள ஏவுகணை சோதனைகள் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை சோதித்து உலக நாடுகளுக்கு வடகொரியா சிம்மசொப்பனமாக விளங்கி வந்தது. ஆனால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அடாவடி போக்கை கைவிட்டு, அமைதிக்கு திரும்பியது.

எனினும் வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிடுவது, அதற்கு பிரதிபலனாக அந்நாடு மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை திரும்பப்பெறுவது தொடர்பான விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து உரசல் நீடிக்கிறது.

இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இருநாட்டு தலைவர்களின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் நிலைமை மேலும் மோசமானது. இந்த சூழலில் கடந்த மாத இறுதியில் தென்கொரியா சென்றிருந்த டிரம்பை, யாரும் எதிர்பாராத வகையில் கொரிய எல்லையில் வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு சில வாரங்களில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வடகொரியா திடீரென அடுத்தடுத்து நடத்தியுள்ள இரண்டு பாலிஸ்டிக் ஏவுகனை சோதனைகள் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் ஹூடோ தீபகற்பத்தில் இருந்து 2 குறுகிய தூர ஏவுகணைகள் கடலை நோக்கி ஏவப்பட்டுள்ளன.

இந்த ஏவுகணைகள் 250கிமீ தொலைவிற்கு பறந்துச் சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கக் கூடியது. வடகொரியா ஏவுகணை சோதனை செய்திருப்பதை தென் கொரியா உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் இவை எந்தவகை ஏவுகணைகள் என்பது தெரியவில்லை. நிலைமையை உன்னிப்பாக கவனத்து வருவதாக கூறிய அமெரிக்கா பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் செயல்படக் கூடாது என்று வடகொரியாவை அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை வட கொரியா இதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சகம், தங்கள் பிராந்தியத்தில் எந்த ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையும் வரவில்லை என தெரிவித்துள்ளது.




Leave a Reply