BREAKING NEWS

கேரள அரசுடன் நிலுவையில் உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்

கேரள அரசுடனான பேச்சுவார்த்தையில் நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பரம்பிக்குளம்- ஆழியாறு

ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், அதன் கிளை நதிகளான பெருவாரிப்பள்ளம் மற்றும் தூணக்கடவு மற்றும் சமவெளிப்பகுதியில் ஓடுகின்ற ஆழியாறு மற்றும் பாலாறு ஆகிய நதிகளில் கிடைக்கக்கூடிய நீரைப் பயன்படுத்தும் வகையில் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கேரள அரசின் இசைவுடன், தமிழ்நாடு அரசினால், பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த நதிகளிலிருந்து கிடைக்கக் கூடிய நீரை இரு மாநிலங்களின் மின் உற்பத்தி, பாசனம், குடிநீர் வழங்கல், தொழிற்சாலை மற்றும் இதர உபயோகங்களுக்காகப் பயன்படுத்தும் பொருட்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது 1970ல் கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

கேரளாவுடன் ஒப்பந்தம்

1989ல் இந்த ஒப்பந்த மறு ஆய்விற்கான ஆவணங்கள் இரு மாநிலங்களுக்கிடையே பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன. அதையடுத்து 2006-2011 ஆட்சியில் இரு மாநிலங்களின் செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில் திருவனந்தபுரத்திலும், சென்னையிலும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. “மறு ஆய்வு ஒப்பந்த ஆவணப் பரிமாற்றம்” “ஒப்பந்தத்தில் எந்தெந்த இனங்களில் திருத்தம் தேவை” “அப்படி, திருத்தம் தேவைப்படும் எல்லா இனங்கள் தொடர்பான தொகுப்பு” ஆகியவை தி.மு.க. ஆட்சியிலே கேரள அரசுடன் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இறுதியில் 2011ல் இரு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில், “ஆனைமலையாற்றிலிருந்து 2.5 டிஎம்சி அடி நீரை தமிழ்நாட்டிற்கு திருப்பும் திட்டம், மணக்கடவின் மேற்பகுதியில் 0.50 டி.எம்.சி. அடி சமச்சீர் நீர்தேக்கம் திட்டம், நீராறு-நல்லாறு பல்நோக்கு நேர் இணைப்புத் திட்டம், போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு- கேரள அரசின் கருத்தும் கோரப்பட்டு- அதன் பிறகு மீண்டும் அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது” என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிறைவேற்ற வேண்டும்

8 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு அந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதை எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. இப்போது கேரளா முதலமைச்சரைச் சந்தித்திருப்பது வரவேற்புக்குரியது என்றாலும், “மீண்டும் பத்து பேர் கொண்ட குழு” என்று வெளிவந்துள்ள அறிவிப்பு தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. இது மேலும் கூடுதல் காலதாமதத்தை ஏற்படுத்தும். ஆகவே, “மீண்டும் குழு” என முதலில் இருந்து பேச்சுவார்த்தையைத் துவங்கி, தாமதத்திற்கு வழி ஏற்படுத்துவதற்குக் காரணமாக இந்த சந்திப்பு அமைந்து விடக்கூடாது. மறு ஆய்வு ஒப்பந்தத்தை விரைந்து ஒரு குறுகிய கால வரையறைக்குள் நிறைவேற்றிட வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கு இருக்கிறது. கேரள அரசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, நிலுவையில் உள்ள நீர்பாசனத் திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *