BREAKING NEWS

கேரளாவை தேசிய பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவிக்கப்படுமா…..?

 

 


தென்மேற்கு பருவமழை தீவிரத்தினால் கேரளத்தில் ஒருவாரக்காலமாகத் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் ஆலப்புழை, பத்தனம்திட்டை, இடுக்கி, எர்ணாக்குளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. கடந்த ஆகஸ்டு 8-ந் தேதி முதல் மழை, வெள்ளம், மண்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது.

பருவமழை தொடங்கிய நாள் முதல் இதுவரை 187 பேர் உயிரிழந்ததாக கேரள அரசு தெரிவித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் ஆயிரத்து 26 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா, வேளாண்மை ஆகிய துறைகள் கடுமையான இழப்பைச் சந்தித்துள்ளன. நெல், வாழை ஆகிய பயிர்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்குச் சாலைகள் சேதமடைந்துள்ளன. மின்கட்டமைப்புகளும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தாலும் மண்சரிவாலும் இருபதாயிரத்திற்கும் அதிகமான வீடுகள் இடிந்துவிட்டன.

கடந்த 60 ஆண்டுகளில் கேரள மாநிலம் இதுபோன்ற பேரிடரை சந்தித்ததே இல்லை என்றே கூறப்படுகிறது. எந்த திசை நோக்கினால் வெள்ளக்காடாக காட்சியளிப்பதை பார்க்கும் போது கேரள மாநிலம் பெரும் பேரிடருக்கு உள்ளாகியிருப்பது தெளிவாக தெரிகிறது. பெரும் பாதிப்பிற்குள்ளான அனைத்து கட்டமைப்பைகளையும் மறு சீரமைப்பின் மூலம் சரிசெய்வது என்பது பெரும் சவாலே என்று சொல்லத்தோன்றுகிறது.

எந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை களத்திலுள்ள அதிகாரிகள் மதிப்பீடு செய்வருகிறார்கள். அதே நேரத்தில், ஆரம்பக்கட்ட மதிப்பீட்டின்படி, 8,316கோடி ரூபாய் அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காகத் தேசியப் பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து 1,220 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் தான், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஞாயிற்றுக்கிழமையன்று கேரளாவிற்கு வந்த அந்த மாநில முதல்வருடன் விமானத்தில் சென்று வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்தார். இயற்கை தாக்குதலை நேரில் பார்த்த ராஜ்நாத் சிங் அதிர்ச்சியடைந்தார் என்றே கூறப்படுகிறது. ஆக, கேரள மாநிலம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் சேதத்தை சந்தித்துள்ளது, மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருப்பதும் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது என்றே தோன்றுகிறது.

இதையெல்லாம் நேரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் உடனடியாக ரூ.100 கோடி நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இருப்பினும் கேரள மாநிலத்தை தேசிய பேரிடர் பாதிப்புக்குள்ளானதாக அறிவித்து, அதற்குரிய நிதியை உடனடியாக கொடுத்திட மத்திய அரசு முன் வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.




Leave a Reply