BREAKING NEWS

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் பார்மலின் தடவிய மீன்கள் விற்பனையா? தேனி, போடி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் அதிகாரிகள் சோதனை.

 

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் பார்மலின் என்ற ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் விற்பனைக்கு வருவதாகக் கிடைத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசாயனம்

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்கள் நீண்ட நாள்கள் கெட்டு போகாமல் இருக்க பார்மலின் ரசாயனம் தடவி விற்பனை செய்யப்பட்டது. இறந்த மனிதனின் உடல் பதப்படுத்துவதற்காக பார்மலின் என்னும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

இதனை பயன்படுத்தி பதப்படுத்திய மீன்களை சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. இதனையடுத்து கேரள அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து, பார்மலின் தடவிய மீன்களை பறிமுதல் செய்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தது.

தேனி மாவட்டம்

இந்நிலையில் கேரள மாநிலத்தை ஒட்டிய தேனி மாவட்டத்திலும் பார்மலின் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன.

இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உணவுத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மீன் விற்பனைக்கடைகளை சோதனையிட உத்தரவிட்டார்.

அதிகாரிகள் ஆய்வு

இதனைத்தொடர்ந்து தேனி, போடி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் மீன்வளத்துறை ஆய்வாளர் இந்துசாரா தலைமையில் மீன் விற்பனைக்கூடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பார்மலின் தடவிய மீன் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. அப்போது உண்ணத் தகுதியற்ற காலாவதியான மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் தொடர்ந்து மீன் விற்பனைக் கூடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே சாப்பிடும் உணவு விஷமாகிக் கொண்டிருப்பதால் மனிதன் நாள்தோறும் பல நோய்களுக்கு ஆளாகி வருகிறான். இப்படி உண்ணும் உணவில் ரசாயனம் கலப்பது நஞ்சைக் கலப்பதற்கு சமம் என்பதை வியாபாரிகள் உணர வேண்டும்.




Leave a Reply