BREAKING NEWS

கேஎஸ்.அழகிரியுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடல்…

இந்திரா காந்தி காலத்திலிருந்து அரசியலில் ஈடுபட்டு, ஆரம்பம் முதல் காங்கிரஸ் கட்சியல் மட்டுமே இருந்து வந்துள்ள, தலைவர்களுள் ஒருவர் தான் கேஎஸ் அழகிரி என்று அழைக்கப்படுகிற சம்பந்தம் கீரப்பாளையம் அழகிரி. 1986-91 காலக்கட்டங்களில் கீரப்பாளையம் பஞ்சாயத்து தலைவராக தன்னுடைய அரசியல் அதிகார பொறுப்புகளின் ஆரம்பத்தை தொடர்கிறார். பின்பு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மதிப்பீட்டு குழு உறுப்பினராகவும், மனுக்குழு உறுப்பினராகவும், பொதுக்கணக்கு குழுவின் தலைவராகவும், தமிழ்நாடு அரசின் விவசாய அபிவிருத்திக்கான துணைத் தலைவராகவும், லோக் சபா உறுப்பினராகவும், வெளிவிவகார குழுவின் உறுப்பினராகவும், நிலக்கரி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் முறையே 2001,1992,1993,1997,2008,2009 ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார்.

வேலூர் தேர்தல் பரபரப்புக்கிடையே நீண்ட நேர தொடர்புக்குப் பிறகு தொடர்பில் வந்த அழகிரி நம்மோடு விறுவிறுவென கலந்துரையாடினார்… இனி அவரோடு…

 

தொடக்க கால அரசியல் குறித்து

‘‘நான் மாணவப்பருவத்திலிருந்து காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றேன். அன்னை இந்திரா காந்தி அவர்கள் வங்கிகளை தேசியமயமாக மாற்றிய பொழுது, மன்னர்களுக்கான மானியத்தை ரத்து செய்தபோது அதனால் ஈர்க்கப்பட்டு தேசிய இயக்கத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். அதிலிருந்து தொடர்சியாக காங்கிரஸ் கட்சியிலேயே எனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்து வருகின்றேன்.’’

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கான காரணமாக எதைக் கருதுகிறீர்கள்.?

‘‘அரசியலில் பின்னடைவு, முன்னேற்றம் என்பதெல்லாம் நிரந்தரமானது அல்ல. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு. காங்கிரஸ் பல நேரங்களில் வென்றிருக்கிறது, சில நேரங்களில் வெற்றிக்கான வாய்ப்பை இழந்திருக்கிறது. ஒரு வெற்றிக்குப் பின்னால் ஆயிரம் காரணங்கள் இருப்பதை போல, தோல்விக்குப் பின்னாலும் ஆயிரம் காரணங்கள் இருக்கும். எந்த ஒரேயொரு காரணத்தை மட்டும் குறிப்பிட்டு சொல்வதற்கு இயலாது. ஆக இது எங்களுக்கு பின்னடைவல்ல, மேலும் எங்களை சுதாரித்துக்கொள்வதற்கான வாய்ப்பு. எனவே, நாங்கள் வெற்றிப் பாதையை நோக்கியே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம், விரைவில் நாங்கள் வெற்றியின் சிகரத்தை அடைவோம்.’’

புதிய கல்வி கொள்கை வரைவு 2019 குறித்து.

‘‘புதிய கல்விக்கொள்கையில் சில நல்ல அம்சங்களும் இருக்கின்றன, சில தவறான அம்சங்களும் இருக்கின்றன. எனவே, இதைப்பற்றிய ஒரு பெரிய விவாதம் ஒன்று தேவை. விவாதிக்காமல் ஒரு கல்விக் கொள்கையை ஒதுக்கிவிட முடியாது. சட்ட மன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் விவாதிக்கக் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட வேண்டும். மேலும் பொது அமைப்புகளிடமும் இது குறித்தான விவாதங்களை கொண்டுசெல்ல வேண்டும். கல்வி என்பது மாநிலப் பட்டியலில்தான் இருக்க வேண்டும். இப்போது மத்திய மற்றும், மாநிலப் பட்டியலில் இருப்பது மாறி முழுக்க மாநிலப் பட்டியலுக்கு வந்தால்தான் கல்வி இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. எனவே, புதிய கல்வி கொள்கையை முழுமையாக நாங்கள் ஆதரிக்கவில்லை. அதில் நிறைய மாற்றங்கள் வேண்டுமென்று சொல்கின்றோம். பொதுமக்களால் இக்கல்வி கொள்கை குறித்து சரியாக தீர்மானிக்க முடியாது என்பதால் மேலே குறிப்பிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற, கல்வியாளர்களிடத்தில் மட்டுமே பரந்துப்பட்ட அளவில் விவாதித்தால் போதுமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.’’

புதிய தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா குறித்து.

‘‘தேசிய காங்கிரஸ் இந்த மசோதாவை மிகக் கடுமையாக எதிர்க்கிறது. அரசாங்கம் அதிகாரத்தை மையப்படுத்தும் நோக்கத்தில் இறங்கியுள்ளது. இந்தக் கொள்கை உண்மையிலேயே சிறந்ததாக இருந்தால் மருத்துவர்கள் இவ்வளவு போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கமாட்டார்கள். எனவே, இந்த புதிய தேசிய மருத்துவ கவுன்கில் மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளபட வேண்டும்.’’

சபரி மலை தரிசன விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு தமிழகத்தில் வேறாகவும் கேரளாவில் வேறாகவும் இருந்ததற்கான காரணம்..?

‘‘சபரி மலை கேரள மக்களுடையது. எனவே, கேரள மக்களுடைய முடிவும், அந்த மக்களின் தீர்ப்பும்தான் இதில் முக்கியமானது. எனவே, நாம் போய் அவர்களுக்கு தீர்ப்பு சொல்வதென்பதோ, கருத்து சொல்வதென்பதோ சரியானது அல்ல. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் பெண்களை அனுமதிக்க வேண்டும். எதன் பொருட்டும் பெண்களை அனுமதிக்காமல் இருப்பது என்பது ஏற்புடையது அல்ல.’’

என்.ஐ.ஏ திருத்த சட்டம் குறித்து.,?

‘‘என்.ஐ.ஏ திருத்த சட்டம் என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை குற்றவாளிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்திரிப்பதே அவர்களுடைய நோக்கம். கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு தனி நபர்கள் மீது என்.ஐ.ஏ விசாரணை வழக்குகள் பதியப்பட்டு விசாரணை என்கிற பெயரில் நான்கு, ஐந்து ஆண்டுகள் வழக்குகள் நடத்தப்பட்டு பின் குற்றமற்றவர் என தீர்ப்பு வருகிறது. எனவே, என்.ஐ.ஏ ஒரு உள்நோக்கோடு செயல்படுகிறது. அதில் எவ்விதமான ஜனநாயக மாண்புகளும் கிடையாது. என்.ஐ.ஏ சட்டம் மூலமாக ஒருவரை கைது செய்தால் அவர்களுக்கு 6 மாத காலத்திற்கு பெயில் கிடையாது. இம்மாதிரியான அம்சங்களால் இச்சட்டம் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் என்பதுதான் எங்களுடைய கருத்து. குறிப்பிட்டு சொல்வதென்றால் மதவாத கலவரங்களில் ஈடுபட்டதினால் ஆர்.எஸ்.எஸ்காரார்கள் மேல்தான் என்.ஐ.ஏ வழக்குகள் பதியப்பட்டிருந்தன. ஆனால், இன்றைக்கு அவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. இதிலிருந்தே என்.ஐ.ஏ அரசியலுக்கு நேரடியாக பயன்படுகிறது என்று தெரிகிறது. ஒரு சட்டத்தின் மீது மக்களுக்கு சந்தேகம் வரக் கூடாது. சந்தேகம் வராத வகையில் சட்டம் வேண்டும்.’’

பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு ஆதரவு நிலைப்பாடு தமிழகத்திற்கும் பொருந்துமா.?

‘‘பொருந்தும். அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆதரித்து பேசியிருக்கின்றோம், தீர்மானத்தில் கையெழுத்து இட்டுள்ளோம். 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு எவ்வித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்றும், அதற்கு அப்பாற்பட்டவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. எனவே, இது வேறு எந்த ஒரு தரப்பினருக்கும் பாதிப்பு இல்லை. ஆகவே ஆதரிக்கின்றோம்.’’

கர்நாடகாவில் காங்கிரசின் பலம் மஜதவை விட கூடுதலாக இருந்தும், காங்கிரஸ் ஆட்சி அமைக்காமல் மஜதவுக்கு ஆதரவு அளித்ததுதான் இப்போதைய ஆட்சி மாற்றத்திற்கு காரணமா..?

‘‘அதெல்லாம் காரணம் இல்லை. பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆசை வார்த்தைகள் சொல்லி, பல்வேறு வழக்குகளில் சிக்க வைப்பதாகக் கூறி அச்சுறுத்தியிருக்கிறது. ஆகவேதான், ஒரு அச்சத்தின் பெயரில் காங்கிரசிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளனர். மேலும் கடத்தப்பட்டும், பெரிய ஓட்டல்களில் தங்கவகை்கப்பட்டு, இப்படியாக பாஜகவில் இணையவைக்கப்பட்டிருக்கின்றனர். பாஜகவிற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்திருந்தால் நேர்மையாக தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். விழுமியங்களைப் பற்றி அவ்வளவு பேசுகிற மோடி  அவர்கள், எதற்காக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுசென்று மும்பையில் வைக்க வேண்டும்.? ஜனநாயகத்திற்கு புறம்பாக சட்ட விரோதமாக, எல்லாவிதமான நியாயங்களுக்கும் அப்பாற்பட்டு, அதிகார துஷ்பிரயோகம் மூலமாக ஒரு ஆட்சிமாற்றம் கர்நாடகாவில் நடந்திருக்கிறது. “ஆட்டினுடைய கழுத்தை மரண வியாபாரிகள் அறுப்பது போல், கர்நாடகாவில் அத்தொழிலை செய்துள்ளனர்”. இதற்கு முழுப்பொறுப்பு மோடிதான்.

முத்தலாக் மசோதா குறித்து.

‘‘முத்தலாக் விசயத்தில் சிவில் விசயத்தை கிரிமினல் வழக்காக மாற்றுகிறார்கள். முத்தலாக் சொல்லி ஒரு பெண்னை ஒதுக்குகிற குடும்பத் தலைவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டால் அந்தக் குடும்பத்தின் நிலை என்னவாகும்.? இது கிரிமினல் குற்றமல்ல. இந்நடவடிக்கை சிவில் சட்டத்தில் கிரிமினல் நடவடிக்கையைப் புகுத்தும் செயலாகும். சட்டத்தை இயற்றும் அதிகாரம் அரசிடம் இருப்பதென்பது எல்லா தரப்பினருக்கும் பொருந்தக்கூடியதாய் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதினால் தான். ஆனால், அவர்கள் இன்று சட்டத்தை முழுக்க சிறுபான்மையினருக்கு எதிராக இயற்றுகிறார்கள். இது முழுக்க முழுக்க குடும்பத்தை சிதைக்கும் நடவடிக்கை.’’

காங்கிரஸை இன்னும் நம் தோளில் சுமப்பது சரியா.. என்கிற பேச்சு திமுகவில் உலவுகிறதே.. இந்திலையில் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸின் கூட்டணி தொடருமா?

‘‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இந்தக் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக எந்தப் பிணக்கமும் இன்றி தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரத்தான் செய்யும்.’’

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் எதிர்க்கட்சிப் பதவியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்குறித்து எழும் ஐயப்பாட்டுக்கு வலு சேர்ப்பதைப்போல் இருப்பதாகக் கருதப்படுகிறதே?

‘‘இதற்கும் தலைமைக்கும் சம்பந்தமில்லை. மதவாத சக்திகள் வெற்றியடைந்து இருக்கிறார்கள். அவர்களுடைய இந்த வெற்றி தற்காலிகமானதுதான். எங்களுடைய தலைமை இன்றைக்கும் அற்புதமான தலைமை ஆரோக்கியமான தலைமை. அதில் எந்த சந்தேகத்துக்கும் துளியும் இடமில்லை.’’

 

  • ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரின் விடுதலைக் குறித்து…

‘‘நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தால் அதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. இவர்களைத் தவிர எவ்வளவோ கைதிகள் சிறையில் இருக்கின்றனர். அதைத்தவிர்த்து இவர்களைப் பற்றி மட்டும் எழுப்பப்படும் கேள்விகள் உள்நோக்கமுடையவை. ஒருவரை சிறையில் வைப்பதோ விடுதலை செய்வதோ அது நீதிமன்றத்தின் பணி. அதில் தனிமனிதனோ, அரசியல் கட்சிகளோ தலையிட வேண்டாம் என்பது என்னுடைய கருத்து.’’

அண்மைக்காலமாக தேசத்தில் அதிகரித்து வரும் ‘ஜெய் ஸ்ரீராம்’ கொலைகள் குறித்து…

 

‘‘அடிப்படையில் மதப்பற்று என்பதும் மத வெறி என்பதும் வேறானவை. ஒருவன் மதப்பற்றாளனாக இருப்பின் தவறில்லை, மாறாக, மத வெறியனாக இருக்கும் பட்சத்தில் அது தவறு. அதற்கான பலன் அவர்களுக்கு விரைவில் கிடைக்கும்.’’

 

காங்கிரஸ் தமிழகத்தில் வலுப்பெற எந்தமாதிரியான யுக்திகளை பின்பற்ற நினைக்கிறீர்கள்?

‘‘என்னுடைய செயல்களை பின்தொடர்ந்தால் உங்களுக்கே அது தானாக புரியும். பின் நீங்களே அதைப்பற்றி எழுதுவீர்கள்.’’

 

இந்தியாவின் இன்றைய தேவை மூன்றாவது அணியா..? மதச்சார்பற்ற கூட்டணியா..

‘‘ஏற்கெனவே இருக்கின்ற மதச்சார்பற்ற வலிமையான கூட்டணியே போதுமானது.’’
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *