தற்போதைய செய்திகள்

கூடுவாஞ்சேரி அருகே மின்சார ரெயில் பெட்டிகளின் இணைப்பு சங்கிலி உடைந்து பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிப்பு…..

சென்னை,
கூடுவாஞ்சேரி அருகே மின்சார ரெயிலின் இணைப்பு சங்கிலி உடைந்து ரெயில் பெட்டிகள் கழன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், புறநகர் மின்சார ரெயில்களின் போக்குவரத்து ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கும் தினமும் அதிகாலை 4.30 மணி முதல் நள்ளிரவு 12.40 மணி வரை 148 முறை மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. அதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு 37 முறையும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு 37 முறையும் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. மேலும், சென்னை கடற்கரையில் இருந்து காஞ்சிபுரம், திருமால்பூர் பகுதிகளுக்கு 8 முறை மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பஸ் கட்டண உயர்வு
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்ந்ததால், கடந்த சில மாதங்களாக சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அலுவலக நேரத்தில் மட்டுமே மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசல் காணப்படுவது வழக்கம். ஆனால், தற்போது, அனைத்து நேரங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இணைப்பு சங்கலி உடைப்பு
இந்நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி நேற்று மதியம் மின்சார ரெயில் சென்றது. ஊரப்பாக்கம்- கூடுவாஞ்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது திடீரென பெட்டிகளின் இணைப்பு சங்கிலிகள் உடைந்துள்ளது. ரெயில் பெட்டிகள் கழன்று இரண்டு பகுதியாக பிரிந்து நடுவழியில் நின்றதால், பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பயணிகள் பாதுகாப்பு

ரெயிலில் இருந்த பயணிகள் ஒரு பகுதியினர், பகல் 12.27 மணிக்கும், மற்றொரு பகுதியினர் பகல் 12.36 மணிக்கும் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்திற்கும், பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். போக்குவரத்து பாதிப்பு
விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டது. பின்னர், இணைப்பு துண்டாகி பிரிந்த இரண்டு பெட்டிகளை தவிர மற்ற பெட்டிகள் இணைக்கப்பட்டு மீண்டும் அந்த ரெயில் புறப்பட்டுச் சென்றது. இந்த விபத்து காரணமாக, புறநகர் வழித்தடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

மின்சார ரெயில்கள் ரத்து

மேலும், செங்கல்பட்டு – தாம்பரம் இடையே இயக்க இருந்த 40536, 40538 ஆகிய மின்சார ரெயில்வேகள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன.




Leave a Reply