BREAKING NEWS

குளிர்காலக் கூட்டத்தொடர் ஆக்க பூர்வமாக அமையட்டும்..!

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் தற்போது தொடங்கி உள்ளது. நவம்பர் 18-ல் தொடங்கி டிசம்பர் 13 வரையில் இந்தக் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.  மொத்தம் 20 அமர்வுகள் கொண்ட இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முக்கியமான சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக அரசின் தரப்பில் இருந்து தெரிய வந்துள்ளது.  முக்கியமாகக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மற்றும் இரு முக்கியமான அவசர சட்டங்களுக்கு, மாற்றான அதாவது கடந்த செப்டம்பர் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட இ சிகரெட் விற்பனை, தயாரிப்புக்குத் தடை  மற்றும் நாட்டின் பொருளாதார மந்த நிலையை மாற்றவும், வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கவும் உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்கவும் இயற்றப்பட்ட வரிச்சலுகைக்கான அவசரச் சட்டம் ஆகியவற்றிற்கு மாற்றான நிரந்தர மசோதாக்கள் இந்தக் கூட்டத் தொடரில்தான் நிறைவேற்றப்பட உள்ளது.

அதேபோல எதிர்க்கட்சிகள் தங்களது தரப்பில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து விவாதிக்க தயாராகி வருகின்றன.  அதில் முக்கியமாக ஜம்மு –  காஷ்மீரில் நிலவும் இன்றைய சூழல் மற்றும் வீட்டுக் காவலில் உள்ளோர் நிலை குறித்த தகவல்கள், ஆளும் கட்சியிடமிருந்து விளக்கம் பெறவும், மேலும், பொருளாதார மந்தநிலை மற்றும் வேலைவாய்பின்மை, இவற்றுடன் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது செய்து வரும் ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பிரச்சனைகளையும் முன்வைத்து விவாதிக்க எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகின்றன.

இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் கூட்டத் தொடரில், காஷ்மீருக்கான 370 வது சிறப்பு அதிகாரம் வழங்கும் பிரிவை ரத்து செய்தது போல, இந்தக் குளிர்கால கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் மக்களை 1955 குடியுரிமை சட்டத்தின் கீழ் இந்திய குடிமக்களாக ஏற்கலாம் என்பதை தற்போதைய பாஜக அரசு 6 ஆண்டுகளாகக் குறைக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. எனவே, கடுமையான விமர்சனங்கள் இந்தத் தொடரில் இடம்பெறும் என்பதால், இந்த நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கடந்த ஞாயிறன்று மத்திய அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., அ.இஅ.தி.மு.க, தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 27 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் கலந்து கொண்ட பிரதமர் அனைத்துப் பிரச்சனைகளையும் நாடாளுமன்றத்தில் திறந்த மனத்துடன் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக இதே போல மக்களவை சபாநாயகரும் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி, குளிர்கால கூட்டத் தொடர் சுமுகமான முறையில் நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.  நாடாளுமன்ற ஜனநாயகம் செழுமையாக நடை பெற வேண்டும் எனில், அதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியமாகும்.  தேவையற்ற தனிநபர் தாக்குதல், மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை விட்டு விட்டு, வீணாண பிரச்சனைகள எடுத்துக் கொண்டு நாட் கணக்கில் விவாதிப்பது, அதேபோல நாடாளுமன்ற மைய மண்டபத்தில் முழக்கமிட்டு சபையை நடக்கவிடாமல் செய்வது போன்ற செயல்களை எதிர்க்கட்சியினைர் கைவிட்டு ஆரோக்கியமான முறையில் விவாதிப்பதுதான் நல்லது.

அதேசமயம் மெஜாரிட்டி என்கிற பெயரில் முக்கியமான மசோதாக்களை விவாதத்திற்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் நிறைவேற்றுவது, உரிய முறைகளில் அமைச்சர்கள் பதில் அளிக்க மறுப்பது, ஏளனமாக வார்த்தைகளை பயன்படுத்தி அமைச்சர்கள் சிலபேர் பேசுவது, போன்ற செயல்களை மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவும் கைவிட வேண்டும்.  இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், இந்தியாவில் கடைக்கோடியில் உள்ள வாக்காளருக்கும் இணைய வசதி வந்துவிட்டது.  தாம் வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு பேசுகிறார் எவ்வாறு செயல்படுகிறார், உறக்கத்தில் இருக்கிறாரா, ஆஜராகி உள்ளாரா என்பதை எல்லாம் நேரலை மூலமாக உன்னிப்பாக கவனிக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அனைத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுவது நல்லது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *