தற்போதைய செய்திகள்

குற்றால அருவிகளில் 2-வது நாளாக வெள்ளம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளிலும் வெள்ளம்….

செங்கோட்டை,

குற்றாலம் அருவிகளில் 2ம் நாளாக நேற்றும் வெள்ளம் நீடித்தது. பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு

ஓகி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கன மழை நீடித்தது. செங்கோட்டை. குற்றாலம். தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் நேற்று இரண்டாம் நாளாக வெள்ளப்பெருக்கு குறையாமல் வெள்ளம் சீறி பாய்ந்தது.

இதனால் ஐயப்ப பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. மிக அதிகளவில் தண்ணீர் சீறி பாய்ந்ததால் குற்றாலநாதர் கோவில் சுற்றுப்புற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சன்னதி பஜாரில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர்.

பழைய குற்றாலத்தில் வெள்ளமென கொட்டிய தண்ணீர் அருவிப்பகுதியை தாண்டி வந்து விழுந்தது. அருவியில் விழுந்த தண்ணீர் பெண்கள் உடைமாற்றும் அறைகள் வரை வந்ததோடு அருவிக்கு செல்லும் படிக்கட்டுகள் வழியாக கரைபுரண்டு சென்றது. இதனால் பழையகுற்றாலம் அருவிப்பகுதிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஐந்தருவி
ஐந்தருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஐந்து அருவிகளும் ஒரே அருவியாக காட்சி அளித்ததோடு தண்ணீர் கலங்காலாக வந்து விழுந்தது. இதனால் போலீசார் ஐந்தருவி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தனர். புலி அருவியிலும் வெள்ளம் சீறி பாய்ந்ததால் அங்கும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகளும்இ ஐய்யப்ப பக்தர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
மரங்கள் சாய்ந்தது 
தென்காசி குற்றாலம் செங்கோட்டை பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி அருகே உள்ள ஒருமரம் சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஐந்தருவி சாலையில் சிங்கவாய் பங்களா அருகில் ஒருமரம் சாய்ந்ததால் ஐந்தருவிக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் காவல் துறையினர் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினர்;. இதன்பின் போக்குவரத்து சீரானது.
மக்களுக்கு எச்சரிக்கை
செங்கோட்டையை அடுத்த புளியரையில் உள்ள எஸ் வளைவு பகுதியில் 2 மரங்கள் விழுந்தது. மேலும் தென்மலை பகுதியில் 4 காட்டு மரங்கள் கேரளா- தமிழ்நாடு சாலையில் சாய்ந்தது. இதனால் நேற்று நீண்ட நேரமாக போக்குவரத்து பாதித்தது. இருபுறமும் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் நின்று கொண்டிருந்தது. குண்டாறு அணை நிரம்பி தண்ணீர் மறுகால் செல்வதால் குண்டாற்றில் தண்ணீர் அதிகளவு செல்கிறது.

மேலும் குற்றால அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் கன மழை காரணமாக சிற்றாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின் ஓரமாக யாரும் செல்ல வேண்டாம் என வருவாய்த்துறையினர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Leave a Reply