BREAKING NEWS

குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

 

சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

சிறுமி மாயம்

சென்னை மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கம் மாதா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாபு (வயது 35). இவர் பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களது மகள் ஹாசினி (6).

இவர் கடந்த 2017-ம் பிப்ரவரி 5ம் தேதி மாயமானார். வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறுமியின் தந்ைத பாபு, போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பலாத்காரம்

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே குடியிருப்பில் வசிக்கும் குன்றத்தூர் சம்பந்தன் நகர் ஸ்ரீராம் சாலைப் பகுதியைச் சேர்ந்த சேகர்-சரளா தம்பதியின் மகன் தஷ்வந்த் (வயது 24) என்பது கடத்தி சென்றது தெரிவவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சிறுமியை கடத்தி ெசன்ற தஷ்வந்த், அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டார். மேலும் அவரின் உடலை எரித்து விட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜாமீன்

இதையடுத்து தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தஷ்வந்த் ஜாமீனில் வெளியே வந்தார்.

அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போராடினார். எனினும் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, டிசம்பர் 2ம் தேதி தனது தாய் சரளாவை கொலை செய்து விட்டு 25 பவுன் நகைகளுடன் மும்பைக்கு தப்பிச் சென்று தலைமறைவானார்.

தப்பியோட்டம்

இதையடுத்து தனிப்படை போலீசார் மும்பை சென்று செம்பூர் ரேஸ்கோர்சில் பதுங்கியிருந்த தஷ்வந்தை டிசம்பர் 5-ந் தேதி கைது செய்தனர். டிசம்பர் மாதம் 7-ல் மும்பை நீதிமன்றத்தில் வாரண்ட் பெற்று சென்னைக்கு அழைத்து வந்தபோது மும்பை விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டலுக்குச் சென்றனர்.

அப்போது தஷ்வந்த் கைவிலங்குடன் போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்றார். அதனையடுத்து மும்பை அந்தேரியிலுள்ள ஹோட்டலில் பதுங்கியிருந்த தஷ்வந்தை போலீசார் மீண்டும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.

தூக்கு தண்டனை

பரபரப்பான இந்தக் கொலை வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். விசாரணை முடிவடைந்து, நீதிபதி வேல்முருகன் அளித்த தீர்ப்பில், தஷ்வந்துக்கு 46 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கொலை செய்த குற்றத்துக்காக தூக்கு தண்டனையும் விதித்து இவற்றை ஏக காலத்தில் அனுபவித்து அவரைத் தூக்கிலிட உத்தரவிட்டார்.

தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, தன்னை விடுவிக்க வேண்டுமென தஷ்வந்த் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாகிய இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

உறுதி

இந்த நிலையில், தஷ்வந்த் தூக்குதண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து நீதிபதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்யப்படுகிறது. தஷ்வந்த் மீதான அனைத்து வழக்குகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தஷ்வந்த் சார்பில் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுகிறது.”

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், தஷ்வந்த் சார்பில் சிறப்பு மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. தஷ்வந்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை, சமூக ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர்.

—–
Leave a Reply