BREAKING NEWS

குறைந்த காற்றழுத்த தாழ்வால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

தென்கிழக்கு அரபியன் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு, தமிழகம், கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நீடிக்கிறது. இதன் காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களலும் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யலாம். சென்னை நகரில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் தென்தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும். மேலும், குமரிக் கடல், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை விவரம்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் வால்பாறை தாலுகா அலுவலகத்தில் 7 செ.மீ., திருச்சியில் 5 செ.மீ., சின்னகல்லாரில் 4 செ.மீ., பஞ்சப்பட்டி, அறந்தாங்கி, ஒகேனக்கல், பாபநாசம், கொடைக்கானல், சிவகங்கையில் தலா 3 செ.மீ., திருபுவனம், குழித்துறை, சத்திரப்பட்டி, போடிநாயக்கனுார், ராசிபுரம், திருவையாறு, பேச்சிப்பாறையில் தலா 2 செ.மீ., காங்கேயம், திருச்சி விமான நிலையம், தக்கலை, மேலுார், பூதப்பாண்டி, பெரியார், மயிலாடியில் தலா ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இயல்பை விட 23 சதவீதம் அதிகம்

கோடையின் உச்சக்கட்டமான கத்திரி வெயில் அன்கிற அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. நேற்று (28-ந் தேதி) உடன் நிறைவடைந்தது. கத்திரி வெயிலுக்கு மத்தியில் கோடை மழை அவ்வப்போது பெய்ததால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட 23 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் மார்ச் 1-ந் தேதி முதல் மே 28-ந் தேதி வரை 15 செ.மீ., மழை பெயப்துள்ளது.




Leave a Reply