BREAKING NEWS

குரூப் 4 தேர்வர்களுக்கு இலவச ஒரு நாள் ஊக்க முகாம் சென்னையில் வரும் 21ம் தேதி நடக்கிறது

குரூப் 4 தேர்வர்களுக்கு இலவச ஒரு நாள் ஊக்க முகாம் வரும் 21ம் தேதி காலை 10.30 முதல் மாலை 5.30 மணி வரை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக அண்ணா மேலாண்மை நிலையத்தின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இயக்குநர் மற்றும் பயிற்சித் துறைத் தலைவர் வெ. இறையன்பு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் அண்ணா மேலாண்மை நிலையம் கட்டுப்பாட்டில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தின் மூலம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் குரூப் 4 தேர்வர்களுக்கு இலவச ஒரு நாள் ஊக்க முகாம் வரும் 21ம் தேதி காலை 10.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 01.09.2019 அன்று நடத்த உள்ள குரூப் 4 தேர்விற்கான தேர்வில் கலந்துகொள்ளும் தேர்வர்கள் இதன் மூலம் பயனடையலாம். அமைச்சர் ஜெயக்குமார் இம்முகாமைத் தொடங்கி வைக்கிறார்.

இம்முகாமில் பங்குபெறுபவர்களுக்குத் தேர்வினைப் பற்றிய விரிவான விளக்கங்களையும், திறம்பட தேர்வினை எதிர்கொள்ளவும், பாட வாரியாக நுணுக்கமான தகவல்களையும் தேர்வினை எளிதில் புரிந்து எதிர்கொள்வது போன்றவற்றில் தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவும், விரிவான விளக்கங்களை சிறப்பு அழைப்பாளர்கள் வழங்க உள்ளனர்.

இம்முகாமில் தேர்வர்கள் பங்குபெறுவதை உறுதி செய்ய www.annainstitute.org என்ற இணைய தளத்தில் 17.8.2019 முதல் 20.8.2019 மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

முகாம் அன்றும் காலை 9 மணி முதல் நேரடிப் பதிவும் செய்து கொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது. முதலில் பதிவு செய்யும் 1000 நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இந்த ஊக்க முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரு கையேடு, குறிப்பு நோட்டு, மதிய உணவு, தேநீர் அனைத்தும் துறை சார்பில் வழங்கப்படும்.

இம்முகாமின் நோக்கம் குரூப் 4 தேர்விற்கு தயார் செய்யும் தேர்வர்களை எவ்வித தயக்கமுமின்றி தேர்வினை எதிர்கொள்ளச் செய்வதாகும்” என்று தெரிவித்துள்ளார்.




Leave a Reply