தற்போதைய செய்திகள்

குரங்கணி மலை காட்டுத்தீயில் சிக்கி-பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு டிரக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் வெளிநாடு செல்லத் தடை….

மதுரை,

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது. இந்தநிலையில் சென்னை டிரக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு ‘ லுக் அவுட்’ நோட்டீசை தமிழக போலீஸார் அனுப்பியுள்ளனர்.
காட்டுத்தீ

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ந் தேதி மாலை தீப்பிடித்தது. இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மறுநாள் பிணமாக மீட்கப்பட்டனர்.
மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்திருந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அணுவித்யா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக மரணமடைந்தனர்.
பலி உயர்வு
இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த சத்யகலா மற்றும் சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதன் மூலம், பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
டிரக்கிங் கிளப்
சென்னை பாலவாக்கத்தில் உள்ள சென்னை டிரக்கிங் கிளப் என்ற மலையேற்றப் பயிற்சி நிறுவனம், மலையேற்றத்துக்காக 27 பேரை சென்னையில் இருந்து தீ விபத்து நடந்த குரங்கணி மலைக்கு அழைத்துச் சென்றது. இதன் உரிமையாளரான பீட்டர் வான்கே தற்போது தலைமறைவாக இருக்கிறார். அவர் மீது தேனி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது நிறுவனத்தை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பீட்டர் வான்கே வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டாரா அல்லது இந்தியாவில்தான் இருக்கிறாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வெளிநாட்டுக்குத் தப்பிவிடாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட்’ நோட்டீஸைத் தமிழக போலீஸார் அனுப்பியுள்ளனர். தலைமறைவான பீட்டர் பிடிபட்டால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று தெரிகிறது.
Leave a Reply