தற்போதைய செய்திகள்

குரங்கணி காட்டுத் தீ விபத்து-சிகிச்சை பலனின்றி ஈரோடு பெண் பலி பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு…..

மதுரை,
குரங்கணி தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை திவ்யா சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இவருடன் சேர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.

குரங்கணி மலை

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டது. உயிருக்கு போராடிய சுமார் 27 பேர் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இவர்களில் 14 பேர் மதுரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த நிஷா (வயது20) நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். நேற்று காலை மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை சேர்ந்த திவ்யா உயிரிழந்தார். இத்துடன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே தீவிபத்தில் படுகாயமடைந்த சென்னையை சேர்ந்த ஜெய. ஏர்ஆம்புலன்சு மூலம் மதுரையில் இருந்து கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் மதுரை மருத்துவமனையில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தீவிர கண்காணிப்பு
இவர்களை காப்பாற்ற மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். தீக்காயம் அடைந்து மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு நேரில் பார்த்தார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அவர்களது உறவினர்களிடமும் ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று மதுரை சென்றார். அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவோரை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அதன்பின்னர், அவர்களின் உறவினர்களுக்கு ஆளுநர் ஆறுதல் கூறினார். அமைச்சர் அன்பழகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் உடன் சென்றனர்.
கண்ணீருடன்..
இந்த நிலையில், தீக்காயமடைந்தோரில் 50% பேர் கவலைக்கிடமாக உள்ளனர், அவர்கள் 24 மணிநேர கண்காணிப்பில் உள்ளனர் என்று மதுரையில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிலையில், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களை கண்காணிக்க தவறியதாக வனவர் ஜெய்சிங் என்பவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தீ விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் மருத்துவமனை வளாகங்களில் கண்ணீருடன் சோகமே உருவான நிலையில் அமர்ந்துள்ளனர். அவ்வப்போது மருத்துவக் குழுவினரிடம் உடல்நிலை குறித்து விசாரித்தப்படி கண்கலங்கி அமர்ந்திருக்கும் காட்சி பரிதாபமாக உள்ளது.

வனப்பகுதிக்குள் செல்ல ரூ.200 செலுத்தினோம் மீட்கப்பட்ட பிரபு வாக்குமூலம்

திருப்பூரில் இருந்து மலையேற்றத்துக்கு சென்றவர்களை ‘டூர் டி இந்தியா ஹோலிடேஸ்’ என்ற நிறுவனத்தை சேர்ந்த பிரபு என்பவர் அழைத்து சென்றார். இந்தநிலையில் பிரபு போலீசாரிடம் அளித்த பரபரப்பான வாக்குமூலம் வருமாறு:

வழிகாட்டி

‘டூர் டி இந்தியா ஹோலிடேஸ்’ என்ற பெயரில் ஈரோடு திண்டலில் சுற்றுலா அலுவலகம் வைத்துள்ளேன். மார்ச் 10-ந் தேதி நான் உட்பட 12 நபர்களுடன் சென்னிமலையில் இருந்து அருள் முருகன் டிராவல்ஸ் மூலம் தேனி வழியாக குரங்கணி பகுதிக்கு சுற்றுலா, மலையேற்றத்திற்காக சென்றோம். எங்களுடன் குரங்கணி மலைபகுதியை நன்கு அறிந்த ரஞ்சித் என்ற வழிகாட்டியும் உடனிருந்தார்.

சோதனை சாவடியில் ரூபாய் 200 செலுத்தி அனுமதி சீட்டு பெற்றோம். கொழுக்குமலையில் இரவில் தங்கியிருந்தோம். மார்ச் 11-ந் தேதி கொழுக்குமலையில் இருந்து குரங்கணிக்கு இறங்கினோம்.

காட்டுத்தீ

மதியம் சுமார் 2 மணியளவில் காட்டுத் தீ பரவுவதை அறிந்த ரஞ்சித் வேகமாக மலையை விட்டு இறங்க வேண்டும் என்றார். ஆனால் அசம்பாவிதமாக காட்டுத்தீ வேகமாக எங்களை நெருங்கியது.

இதனால் நாலாபுறமும் சிதறி ஓட ஆரம்பித்தோம். காட்டுத்தீ அணைந்த பின்னர் குரங்கணி நரிப்பட்டியில் உள்ள மக்கள் , வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீட்டனர். நாங்கள் இருந்த பகுதிக்கு சென்று பார்த்த போது 9பேர்கள் தீயில் கருகி உயிரிழந்திருந்தார்கள். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குரங்கணியில் தீ வைத்த விவசாயிகள்: கிளப் குற்றச்சாட்டு (பாக்ஸ்)

சென்னையில் இருந்து 27 பேரை டிரெக்கிங் அழைத்து சென்ற சென்னையில் உள்ள கிளப்பின் நிறுவனர் பீட்டர் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் அந்த கிளப் முகநூலில்; நாங்கள் வனத்துறைக்கு கட்டணம் செலுத்தி முறையாக சென்றோம். மேலும் சிறப்பான பயிற்சியாளர்களும் உடன் வந்தனர். மலையேறும் போது எவ்வித தீ பற்றும் அறிகுறியும் தெரியவில்லை. ஆனால் மலையில் இருந்து கீழே இறங்கும் போது காட்டு தீ கிளம்பியது. இது இப்பகுதியின் விவசாயிகளே வைத்துள்ளதாக தெரிய வருகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Leave a Reply