BREAKING NEWS

குட்கா ஊழல் வழக்கு சென்னையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை.

குட்கா ஊழல் தொடர்பாக சென்னையிலுள்ள தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் விசாரணை நடத்திய மத்திய புலனாய்வு குழு (சி.பி.ஐ.,) அதிகாரிகள், ஊழல் நடந்தபோது பதவியில் இருந்த அதிகாரிகள் பெயர்களையும் வாங்கியுள்ளனர்.

குட்கா ஊழல் வழக்கு

குட்கா ஊழல் முறைகேடு தொடர்பாக தி.மு.க., சார்பில் ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிக் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சி.பி.ஐ., விசாரிக்கத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து குட்கா ஊழல் தொடர்பான விசாரணையைத் தொடங்கிய சிபிஐயின் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு, குட்கா ஊழலில் தொடர்புடைய மத்திய கலால் துறை அதிகாரிகள், தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி.) 120-பி சட்டப் பிரிவின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் (1988) கீழும் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தது.

சி.பி.ஐ. விசாரணை

குட்கா ஊழலில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் குறித்து அமலாகத் துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், பெயர் குறிப்பிடப்படாத மத்திய மாநில அரசு அதிகாரிகள் மீது மத்திய அமலாக்கத் துறை கடந்த 8ஆம் தேதி பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

இந்தச் சூழ்நிலையில் டெல்லியிலிருந்து சென்னை வந்த அசோக் குமார் தலைமையிலான 8பேர் கொண்ட சிபிஐ லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு, நேற்று சென்னை தேனாம்பேட்டையிலுள்ள தமிழக உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

பரபரப்பு தகவல்கள்

அங்கு, குட்கா ஊழலில் சிக்கிய மாதவ் ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார், குட்கா குடோனுக்கு அனுமதி வழங்கியது யார், அங்கு நேரில் ஆய்வு நடத்தியது யார் எனப் பல்வேறு கேள்விகளைத் தற்போது பணியிலிருக்கும் அதிகாரிகளிடம் எழுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து குட்கா ஊழல் நடைபெற்ற சமயத்தில் பணியிலிருந்த அதிகாரிகளின் பெயர்களையும் வாங்கியுள்ளனர்.




Leave a Reply