BREAKING NEWS

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்திய அரசியல் சட்டம் 370வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். அத்துடன், இந்த மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. இதற்கான மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த உத்தரவின் காரணமாக, காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது.

ஜம்முகாஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று முந்தினம் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை சோதனையும் நடத்தி உள்ளது. இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. பூஞ்ச் மாவட்டம் மெந்தர் செக்டார் எல்லைக் கோட்டில் காலை 11.30 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சிறிய ரக ஆயுதங்களாலும் மோர்ட்டார் ரக குண்டுகளாலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சண்டை சிறிது நேரம் நீடித்தது. இதில் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதனால் எல்லையோர பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே கடந்த 24-ம் தேதி பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காட்டி எல்லைக்கோட்டில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply