BREAKING NEWS

காஷ்மீரில் இந்துக்களை குடியேற்றி, முஸ்லிம்களை சிறுபான்மையினராக்க இந்தியா முயற்சிக்கிறது பர்வேஸ் முஷாரப் குற்றச்சாட்டு

காஷ்மீரில் இந்துக்களை குடியேற்றி, முஸ்லிம்களை சிறுபான்மையாக்க இந்தியா முயற்சிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் சட்டவிரோத குடியேற்றத்தை பாகிஸ்தான் பிரதமர் தடுத்து நிறுத்துவார் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. இணையதொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டு உள்ளன.

ராணுவத்தினரின் பாதுகாப்பு வளையத்தில் ஜம்மு-காஷ்மீர் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம், பாகிஸ்தானும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

மேலும், இந்திய அரசாங்கம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை எதிர்த்து ஐ.நா சபையை பாகிஸ்தான் நாடியுள்ளது. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து முஷாரப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலில் நடந்த விவகாரத்தை காபி அடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள் குடியேற்றத்தை தடுக்க அவர்களின் நிலங்களை தன் நாட்டோடு இணைத்தனர். இதையே பிரதமர் நரேந்திர மோடியும் செய்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரில் யார் வேண்டுமாலும் நிலம் வாங்க அனுமதிப்பதன் மூலம் அவர்கள் நில அபகரிப்பில் ஈடுபடுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது எனக் கூறியுள்ளார்.

அதேபோல், காஷ்மீரில் இந்துக்களை குடியேற்றம் செய்வதன் மூலமாக காஷ்மீரை முஸ்லீம் பெரும்பான்மையிலிருந்து இந்து பெரும்பான்மையாக மாற்றுவதற்கான முயற்சியில் இந்தியா ஈடுபடுவதாக கருத்து தெரிவித்துள்ளார். இந்த சட்ட விரோத குடியேற்றத்தை பாகிஸ்தான் பிரதமர் தடுத்து நிறுத்துவார் என்றும், மீண்டும் பழைய நிலைமை வர எதையும் செய்ய தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply