தற்போதைய செய்திகள்

காவிரி வரைவு திட்டம் 14-ந் தேதி தாக்கல் மத்திய அரசு தகவல்.

காவிரி வரைவு திட்டம் 14-ந் தேதி தாக்கல்
மத்திய அரசு தகவல்
மீண்டும் கால அவகாசம் கேட்காமல் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி
புதுடெல்லிமீண்டும் கால அவகாசம் கேட்காமல் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வரும் 14-ந் தேதி காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் மேலும் அவகாசம் கேட்கப்பட மாட்டாது என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உறுதியாக தெரிவித்துள்ளார்.

மேல்முறையீடு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கவேண்டிய நீரின் அளவை குறைத்து கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. என்றாலும், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) ஒன்றை 6 வாரத்துக்குள் ஏற்படுத்துமாறும் அந்த தீர்ப்பில் உத்தரவிட்டது.

6 வாரம் கெடு

உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார கால கெடுவரை அமைதி காத்த மத்திய அரசு, மார்ச் மாத இறுதியில் உச்ச நீதிமன்றதில் “ஸ்கீம்” என்பதற்கு விளக்கம் கோரியும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள செயல்திட்டத்தை அமல்படுத்த மேலும் 3 மாதங்கள் அவகாசம் கேட்டும் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் காலம் கடத்துவதாக தமிழக அரசு தரப்பில் மத்திய கேபினட் செயலாளர் மற்றும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கான மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அவமதிப்பு வழக்கு

இதேபோல் புதுச்சேரி அரசு கொறடா ஆர்.கே.ஆர் அனந்தராமன் தரப்பில் மத்திய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தாமதம் இன்றி அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி புதுச்சேரி அரசு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களும் கடந்த மாதம் 9-ந் தேதியன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மே 3-ந் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வரைவு செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

தேர்தல் பிரசாரம்

மே 3-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய முடியவில்லை என மத்திய அரசு பதிலளித்தது. இதனையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை மே 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். மேலும் தமிழகத்திற்கு 4 எம்.டி.சி நீரை தர வேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு தண்ணிரை தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

உச்ச நீதிமன்றத்தில் 8-ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12-ந் தேதி நடைபெற உள்ளதால் காவிரி வழக்கை ஒத்தி வைக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. மேலும்

வரைவு செயல் திட்டம் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த வரைவு செயல்திட்டத்தின் இறுதி வடிவத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு மேலும் 2 வாரங்கள் தேவைப்படுகின்றன.

தீர்ப்பின் நோக்கம்

அவசரப்பட்டு எடுக்கும் நடவடிக்கை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் நோக்கத்தை நிறைவு செய்வதாக அமையாது.

இது தொடர்பான வரைவு செயல்திட்டத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய 2 வாரங்கள் தேவைப்படுகிறது. எனவே, வருகிற 16-ந் தேதி அல்லது அதற்கு பிறகு இந்த வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கவேண்டும். என மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது.

செயல் திட்டம்

இதை தொடர்ந்து வரும் 14-ந் தேதி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் வரும் 12-ந் தேதி கர்நாடக தேர்தல் நடக்க உள்ளதால் மே 14-ந் தேதி மத்திய அரசு காவிரி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்றும், கூடுதல் அவகாசம் கேட்கலாம் என்றும் கூறப்பட்டது.

இது குறித்து நிருபர்களுக்கு அளித்த மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் 14-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது வரைவு திட்டத்தை உறுதியாக தாக்கல் செய்வோம் மேற்கொண்டு அவகாசம் கேட்க மாட்டோம். வரைவு திட்டம் தயாராக உள்ளது என கூறினார்.




Leave a Reply