தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்:29-ந் தேதி வரை பொறுமையாக இருப்போம் சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில்…

சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் 29-ந் தேதி வரை பொறுமையாக இருப்போம் என்று மு.க.ஸ்டாலினுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

மு.க.ஸ்டாலின் கேள்வி

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டுமென்று அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி அழுத்தம் தந்திருக்கிறார். அதுமட்டுமல்ல, இன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அதனை ஆதரிப்பதாகவும் அறிவித்து, மாநில உரிமையை பெறுவதில் அவர் தருகின்ற அழுத்தத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
9 நாள் மட்டுமே உள்ளது
இந்நிலையில், இந்த அவையை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கின்ற காலக்கெடு 6 வாரம். வரும் 29-ம் தேதியோடு அது முடிவடைகிறது. இடையில் 9 நாட்கள் மட்டுமே இருக்கின்றன.

மத்திய அரசு கவிழ்ந்துவிடாது

எனவே, மாநில உரிமையை பாதுகாக்க பக்கத்தில் இருக்கின்ற மாநிலத்தின் முதலமைச்சர் எந்தளவுக்கு முனைப்போடு ஈடுபட்டு இருக்கிறாரோ, அதே முனைப்போடு மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கூடிய வகையில், இன்று 12 மணியளவில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை இந்த அரசு மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அதிமுகவின் சார்பில் இருக்கின்ற 37 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் செய்தி அனுப்பி, அந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று, நான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இதனால், மத்திய அரசு கவிழ்ந்து விடப்போவதில்லை. அதற்கான வாய்ப்பு கிடையாது. இருந்தாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் தருகின்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தை முதலமைச்சரிடமிருந்து தங்கள் வாயிலாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் பதில்
இதற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்து கூறியதாவது:

காவேரி நதி நீர் பிரச்சினை பல கட்டங்களைக் கடந்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று, உச்ச நீதிமன்றத்தால் 6 வார காலத்திற்குள் காவேரி மேலாண்மை வாரியத்தையும், காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஆணித்தரமாக சொல்லியிருக்கிறோம்
இதற்கிடையில், நான்கு மாநில தலைமைச் செயலாளர்களையும் அழைத்து அவர்களுடைய கருத்துக்களும் கேட்கப்பட்டது. நம்முடைய கருத்தாக, தமிழக அரசினுடைய கருத்தாக, 6 வார காலத்திற்குள் அவசியம் மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தையும், காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் ஆலோசனையையும், அறிவுரையினையும் பெற்று, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அந்தக் கருத்தை அந்த கூட்டத்தில் ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறார்.

பொறுத்திருந்து பார்ப்போம்

இது ஒருபுறம் இருக்க, 6 வார காலம் முடிவடைய இன்னும் நேரம் இருக்கிறது. அதுவரை நாம் பொறுமையோடு இருந்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி ஒரு தீர்மானமும் நாம் நிறைவேற்றியிருக்கிறோம். இந்த மாதம் 29-ம் தேதி வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கையில் நாம் இறங்குவோம்.

நாடாளுமன்றம் முடக்கம்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை 6 வார காலத்திற்குள் அமல்படுத்திடுமாறு அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அங்கே வலியுறுத்தியதன் காரணமாக, ஒரு வார காலமாக நாடாளுமன்றமே முடக்கப்பட்டிருக்கிறது. இதுவரை, தமிழக அரசியல் வரலாற்றில், பொதுப் பிரச்சினையை நாடாளுமன்றத்திற்கு எடுத்துக்கொண்டு சென்று, தொடர்ந்து ஒரு வார காலம் முடக்கப்பட்டதாக வரலாறே இல்லை. அந்த வரலாற்றை அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

அதுவேறு-இதுவேறு
பக்கத்து மாநிலத்தில் ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கிறார்கள் என்ற கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் இங்கே சொன்னார். அது அந்த மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அவர்கள் அந்த மாநிலத்திற்கு சிறப்பு நிதி அந்தஸ்து வேண்டுமென்று கேட்கிறார்கள். அது அவர்களுக்குள்ள பிரச்சினை. அதையும், இதையும் முடிச்சுப் போட வேண்டாம் என்று நான் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் நான்கரை ஆண்டுகள் மத்திய அரசுடன் கூட்டணி அமைத்து, அந்தக் கட்சியுடன் இணைந்திருந்தார்கள். அது அவர்களுடைய பிரச்சினை.

மாயத்தோற்றம்
இதில், நம்முடைய நதி நீர் பங்கீடு பிரச்சினையை இணைத்து, ஏதோ அவர்கள்தான் தங்களுடைய மாநில உரிமைக்காகப் போராடுகிறார்கள் என்பது போலவும், நாம் அதைச் செய்யவில்லை என்பது போலவும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஒரு பெரிய மாயத் தோற்றத்தை இங்கே உருவாக்க முயலுகிறார். ஆனால், அந்த மாயத் தோற்றம் எடுபடாது. ஏனென்று சொன்னால், காவேரி பிரச்சினையில் நாம் அனைவரும் ஆரம்ப காலகட்டத்திலிருந்து எடுத்து வருகின்ற நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள், அதிலும் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை, தமிழகத்தினுடைய ஜீவாதார உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அவர்கள் எடுத்த நிலை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பதிவை அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நிலைநிறுத்தும்.
நல்ல முடிவு எடுப்போம்
ஏனென்றால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. அந்தத் தீர்ப்பின்மீது நாம் இப்போது விவாதிக்க முடியாது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு, நாம் பொறுமையாக இருப்போம். இது தொடர்பாக மேற்கொண்டு ஒன்றும் நடக்கவில்லை என்றால் மீண்டும் நாம் அனைவரும் கூடி ஒரு நல்ல முடிவை எடுப்போம்.
இவ்வாறு துணை முதல்வர் கூறினார்.
Leave a Reply