தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரிய அமைக்க வலியுறுத்தி-முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச்செய்யுங்கள். பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்….

சென்னை,
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, தி.மு.க. நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் வஞ்சகம்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் வஞ்சகத்தை கண்டு மக்கள் சினம் கொண்டுள்ளதை எந்தப்பக்கம் திரும்பினாலும் உணர முடிகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தி மத்திய அரசு, தமிழ்நாட்டை மாற்றாந்தாய் போக்குடன் நடத்தி வருகிறது. உச்சநீதிமன்றத்தின் கெடு நிறைவடைந்தபிறகு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமையுடன் விளையாடுகிறது. காவிரி விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது.

நீர்த்துப்போகும் முயற்சி
“ஸ்கீம்” என்பதே “மேலாண்மை வாரியம் அமைப்பதுதான்” என்பது புரிந்தும், கர்நாடக தேர்தல் லாபத்திற்காக மத்திய அரசு நாடகமாடுகிறது. சட்டப்பிரிவு 6A(2)ன்படி, ஸ்கீம் என்பது ஆணையம் என்று கூறப்பட்டுள்ளது. “ஆணையம்” என்பதை உள்ளடக்கிய ஸ்கீம் உருவாக்க வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு இட்டிருக்கும் கட்டளை. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் பற்றியும் அதன் விவரங்கள், கூட்டங்கள் நடத்தும் முறை ஆகியவை பற்றியும் விளக்கியுள்ளது.

மத்திய அரசு இப்போது காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மாறாக வேறு ஒரு ஸ்கீமை உருவாக்கலாமா என்று தமிழகத்தின் உரிமையை அடியோடு நீர்த்துப்போக வைக்கும் விளக்கத்தையும் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டிருக்கிறது. குறிப்பாக, கர்நாடாகாவில் இந்த ஸ்கீமை உருவாக்கினால் கலவரம் வரும் என்று மத்திய அரசே கற்பனை செய்து உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தை வஞ்சிப்பதையே மத்திய அரசு நோக்கமாக இருப்பதை இது காட்டுகிறது. பா.ஜ.க.வின் சொந்த தேர்தல் லாபத்திற்காக மத்திய அரசு தனது மேலாண்மை அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்கிறது.

ஆதரவளிக்க வேண்டும்

வரும் 5ம் தேதி, மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் நடத்துவது எனவும், ஆளுநர் மாளிகை நோக்கி, காவிரி உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்வதென்றும், தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும்போது, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்ட நெருப்பு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தீயாக பரவவேண்டும்.

இது, தமிழக மக்களின் வாழ்வுரிமைப் போர். அதனால், ஏப்ரல் 5ந் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள், தொழிற்சங்கத்தினர், மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் என அனைவரும் கரம் கோர்த்து, முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும். காவிரி உரிமை மீட்பு பயணம் மற்றும் பிரதமர் வருகையின் போது கருப்புக் கொடி போராட்டம் ஆகியவற்றை அறவழியில் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply