தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவது மத்திய அரசின் கடமை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி….

சேலம்,
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்ற நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதல்வர் ஆய்வு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று, சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றையதினம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சமுத்திரம் ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இப்போது பக்கநாடு ஊராட்சியில், புதிய ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று திறக்கப்படும். ஆகவே,ஜெயலலிதாவின் ஆட்சி காலத்திலும், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகும், இன்றைக்கு ஏழை எளிய மக்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, அதிக மருத்துவமனை கிராமப்புறத்திலே திறந்து ஏழை எளிய மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கக்கூடிய சூழ்நிலையை ஜெயலலிதாவின் அரசு இன்றைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.
மத்திய அரசு அமைக்கும்
கேள்வி – காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு 29-ந் தேதி இறுதி நாள். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.
முதல்-அமைச்சர்: – ஏற்கனவே ஜெயலலிதா முயற்சியின் காரணமாக நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை ஜெயலலிதா சட்ட போராட்டத்தின் மூலமாக மத்திய அரசிதழில் வெளியிட செய்தார். இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் உச்சநீதிமன்றத்திலே வழக்குகள் தொடர்ந்ததன் தொடர்ச்சியாக, தமிழகமும் தன்னுடைய நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்திலே எடுத்து வைத்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று கெடு விதித்திருக்கிறது. இன்னும் நாட்கள் இருக்கின்ற, நிச்சயம் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
கேள்வி – இப்போது நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருக்கிறார்களா?
முதல்-அமைச்சர் – அந்த நிலைப்பாடு எல்லாம் கடந்து வந்து விட்டது. ஏற்கனவே கடிதம் எழுதினோம். எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும், இது உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு. ஆகவே, இந்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆகவே, மத்திய அரசை வலியுறுத்தி, தொடர்ந்து எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திலே குரல் கொடுத்திருக்கிறார்கள். நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை முடக்கப்பட்டு இருக்கிறது.
அந்த அளவிற்கு மத்திய அரசிற்கு ஜெயலலிதா ஆசி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று இன்றைக்கு மத்திய அரசை வலியுறுத்தி கொண்டிருக்கின்றோம்.
நியூட்ரினோ திட்டம்
கேள்வி:- தேனியில் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கொடுத்திருக்கிறது?
முதல்-அமைச்சர்:- – நியூட்ரினோ திட்டம் எல்லாம் இப்போது வந்த திட்டம் அல்ல. அது எல்லாம் ஏற்கனவே நீண்டகாலமாக திட்டம் தீட்டப்பட்டு, நடைமுறைப்படுத்துகின்ற காரணத்தினாலே வேண்டுமென்றே திட்டமிட்டு சிலபேர் இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான், இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் புதிதாக நாங்கள் வந்து கொடுத்து கட்டினார்களா, இல்லை. நிருபர்களும், ஊடக நண்பர்களுக்கும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். இந்த ஆட்சியிலே எந்த குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஆட்சி சிறப்பாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. அதற்காக இடையூறு செய்ய வேண்டும். தேடி தேடி கண்டுபிடித்து செய்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறதே ஓழிய வேறொன்றும் கிடையாது.
ஏதோ நாங்கள் வந்து ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்த திட்டத்தை கொண்டு வந்த மாதிரியும், நாங்கள் மக்களுக்கு விரோதமாக செயல்படுவது மாதிரியும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, எங்களை பொறுத்தவரைக்கும் மக்களுக்கு பாதிப்பில்லாத ஜெயலலிதா அரசு செயல்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

ஸ்டர்லைட் ஆலை விவகாரம்: மக்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்-முதல்வர் எடப்பாடி பழனிசாமி 
ஸ்டர்லைட் ஆலை பிரச்சனை மிகப் பெரிய பிரச்சனையாக தற்போது உருவெடுத்து இருப்பது குறித்து? முதல்-அமைச்சரிடம் கேட்டபோது, “ஸ்டர்லைட் இந்த ஆட்சியில் வந்ததாக நீங்கள் கருதக் கூடாது. ஏற்கனவே அது இயங்கி கொண்டிருக்கிறது. இப்போது அதை விரிவுபடுத்த வேண்டும் என்று முற்பட்டிருக்கிறார்கள், அதனால் அங்கிருக்கிற மக்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்கள். அதை அரசு உரிய முறையிலே பரிசீலிக்கும். இது நீதிமன்றத்திற்கு எல்லாம் போய் வழக்குகள் எல்லாம் நடைபெற்றிருக்கிறது. அதை எல்லாம் பார்த்து தான் ஒரு முடிவு காண வேண்டும்.
கேள்வி: – ஆனால் மக்கள் தொடர்ந்து 48 நாட்களாக போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்களே?
முதல்-அமைச்சர் – நீதிமன்றத்திற்கு போய், நீதிமன்றத்திலே என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் இருக்கிறது என்று ஆராய்ந்த பிறகு தான் இதுக்கு ஒரு முடிவு சொல்ல முடியும்.” என்று தெரிவித்தார்.




Leave a Reply