தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு உறுதி அளிக்கும் வரை,நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்குவோம் * பா.ஜ.க.வுடன் கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை * சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்….

சென்னை,
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு உறுதி அளிக்கும் வரை நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்குவோம் என்றும். பா.ஜ.க.வுடன் எங்களுக்கு கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார்.
உங்களுக்கு பொருந்தும்
அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிக்கீட்டு பேசியதாவது:

இந்த கதை உங்களுக்கு பொருந்துமா அல்லது எங்களுக்கு பொருந்துமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஏன் என்று சொன்னால், நீங்கள் ஐந்து ஆண்டு காலம் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கின்ற போது, ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தீர்கள். அதனால்தான், அந்த கதையை நன்றாக தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.
நாடாளுமன்றம் முடக்கம்
எங்களை பொருத்தவரைக்கும், நாங்கள் எந்த கூட்டணியும் அமைக்கவில்லை, அவர்களுக்கு ஆதரவும் தரவில்லை. தமிழகத்தினுடைய நிலைப்பாட்டை தான் உரிய முறையிலே நாம் முன்னெடுத்து வைத்து கொண்டு இருக்கின்றோம். தமிழ்நாட்டு மக்களுக்காக வாதாடிக் கொண்டு இருக்கின்றோம். இதுவரை தமிழக வரலாறு காணாத வகையில், இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இதுவரை முடக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தினுடைய ஜீவாதார உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், காவேரி மேலாண்மை வாரியம், காவேரி நீர் முறைப்படுத்தும் குழு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தொடர்ந்து நாடாளுமன்றத்திலே அழுத்தம் கொடுத்து, நாடாளுமன்றத்தை முடக்கி கொண்டு இருக்கின்றோம்.
எண்ணிப் பாருங்கள்
எந்த அளவிற்கு நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழக மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கின்ற அரசாக ஜெயலலிதாவின் அரசு இருக்கும் என்பதை இந்த நேரத்திலே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கூறினார்.

தீர்மான கடிதம்
இதையடுத்து, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிக்கீட்டு பேசியதாவது:

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர்தான் கூட்டினார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். அது காலதாமதம் ஆனதால் சட்டமன்றத்தை கூட்டி, அதில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அந்த தீர்மானத்தை கடிதத்துடன் முதல்வர் பிரதமருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்ற செய்தி எல்லாம் பார்த்தோம்.

நான் கூட இந்த பிரச்சினையை இரு தினகளுக்கு முன்பு எழுப்பிய நேரத்தில் கூட, துணை முதல்வர் இன்னும் 9 நாட்கள் இருக்கிறது, பொறுத்து இருப்போம், அது முடியும் என்ற கருத்தை சொன்னார். நான் இப்போது கேட்கிறேன். இன்னும் 6 நாட்கள்தான் இருக்கிறது. இந்த 6 நாட்களுக்குள் பிரதமர் நம்மை சந்திக்க முடிவு செய்து தகவல் வந்து இருக்கிறதா அல்லது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உறுதிமொழி மத்திய அரசு மூலம் வழங்கப்பட்டு இருக்கிறதா? என்பதை நான் முதலில் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
நீங்கள் தோழமைதானே
இதனை தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் குறிக்கீட்டு பேசியதாவது:

நீங்கள் காங்கிரசுடன் தோழமையாக இருக்கிறீர்கள், கர்நாடகாவை காங்கிரஸ் ஆளுகிறது. உங்கள் செயல் தலைவர் சோனியாகாந்தியை பார்த்து நீங்கள் உதவி பன்னுங்க, ராகுல்காந்தியை பார்த்து நீங்கள் உதவி பன்னுங்க, என்று தமிழகத்துக்காக சொன்னாரா? அதை முதலில் சொல்லட்டும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
செய்துகாட்டுகிறோம்
அப்போது குறுக்கீட்டு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘எங்களால், எங்க ஆட்சியால் எதுவும் முடியல, நீங்கள் முடியுங்கள் என்று எங்களிடம் சொல்லுங்கள், நாங்கள் செய்து காட்டுகிறோம்’ என்றார்.
விளக்கமாக கூறுங்கள்
இந்நிலையில், துணை முதல்-அமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் குறுக்கீட்டு பேசியதாவது:

சொன்னால், எதிர்கட்சித் தலைவர் கோபம் படுவார். உங்களால் எதையும் செய்யமுடியவில்லை. 2007-ல், காவிரி நடுவர் மன்றத்தில் இறுதி தீர்ப்பு வந்தபோது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது நீங்கள்தான். எந்த காலத்தில் எந்த முடிவை நீங்கள் பெற்று தந்தீர்கள் என்பதை எதிர்கட்சித் தலைவர் விளக்கமாக கூறவேண்டும்.

இவ்வாறு துணை முதல்வர் தெரிவித்தார்.

துரைமுருகன் பேச்சு
அப்போது குறுக்கீட்டு பேசிய எதிர்கட்சித் துணை தலைவர் துரைமுருகன், ‘பன்னீர்செல்வத்துக்கு நன்றாக தெரியும், அப்போது நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. அதனால், நாங்கள் கேட்கமுடியாது. சரி அது போகட்டும், ஒரு விஷயம்; ரொம்ப மகிழ்ச்சி, நமது முதல்வர், நாங்கள் ஆதரவு இல்லை, எதிர்க்கிறோம் என்று சொன்னார். மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால் மத்திய அரசை எதிர்த்து இவர்கள் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது’ என்றார்.
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது
அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிக்கீட்டு பேசியதாவது:-

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டாம். எங்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் அனுபவம் வாய்ந்தவர். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நீங்கள் ஏற்றுவீர்கள் என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.

இது அவர்களுடைய ஆந்திரா பிரச்சனைக்காக கொண்டு வருகிறார்கள். நேற்றைய தினமே துணை முதலமைச்சர் விளக்கமாக சொல்லி இருக்கின்றார். அவர்கள் கூட்டணி வைத்து போட்டியிட்டார்கள். பாரதிய ஜனதாவோடு தெலுங்கு தேசம் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று, அமைச்சரவையிலே இடம் பெற்றிருந்தார்கள். அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதற்காக, அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகிறார்கள். நம்முடையது அப்படியல்ல.
அவர்களது பிரச்னை
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக நாம் குரல் கொடுத்து கொண்டு இருக்கின்றோம். அதற்கு யாருமே குரல் கொடுக்கவில்லையே, யாருமே சப்போர்ட் செய்யவில்லையே. அவர்களுடைய பிரச்சனைக்காக தான் அவர்கள் குரல் கொடுக்கிறார்களே ஒழிய, நம்முடைய பிரச்சனையை சுட்டிக்காட்டவில்லை.

ஆகவே, நம்முடைய பிரச்சனைக்கு, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்திலே குரல் கொடுத்து, அழுத்தம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள், நாடாளுமன்றமும் தொடர்ந்து முடங்கக்கூடிய அளவிற்கு நாம் அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கின்றோம் எதிர்க்கட்சி துணை தலைவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கூறினார்.
Leave a Reply