தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தி.மு.க. தொடர்ந்து முயற்சிக்கும். மு.க.ஸ்டாலின் உறுதி…

சென்னை,

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தி.மு.க. தொடர்ந்து முயற்சிக்கும் என்று அந்த கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார்.

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

தி.மு.க. தொடர்ந்து முயற்சிக்கும்

கேள்வி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக நீங்கள் சொன்ன பிறகும் அ.தி.மு.க. கருத்து கூறவில்லையே?

பதில் : ஆட்சியில் இருப்பவர்கள் தான் இதனை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து செல்ல வேண்டும். ஆனால், இதுவரையிலும் அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை. தி.மு.க. பொறுத்தவரையிலும் இதற்காக தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

சந்திப்புக்கு வாய்ப்பு இல்லை

கேள்வி : பிரதமர் மோடியை தி.மு.க. சார்பில் நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படுமா?

பதில் : பிரதமரை சந்திக்க வேண்டுமென்று ஆளும் கட்சி கேட்டதற்கே இதுவரை அழைப்பு வரவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு கொடுத்து விடுவார்களா? ஏற்கனவே, விவசாயிகள் பிரச்னை, `நீட்’ உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக பிரதமரை சந்திக்க நான் பலமுறை நேரம் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் கூட சந்திப்பது தவிர்க்கப்பட்டது. எனவே, இப்போது முதலமைச்சருக்கு அனுமதி கிடைக்காதபோது, எதிர்க்கட்சிகளுக்கும் நிச்சயமாக வாய்ப்பு கிடைக்காது. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.

திராவிட நாடு

கேள்வி : திராவிட நாடு பற்றி நீங்கள் பேசியிருக்கிறீர்களே?

பதில் : திராவிட நாடு என்றொரு நிலை வந்தால் வரவேற்போம் என்று தெரிவித்தேன். திராவிட நாடு கோரிக்கையை பொறுத்தவரை, திராவிட நாடு கொள்கையை கைவிட்டு இருக்கிறோமே தவிர, அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று அண்ணா தெளிவாக சொல்லியிருக்கிறார்.

தென் மாநிலங்கள் அனைத்தும் பா.ஜ.க.வால் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்படுகின்றன என்பதை இன்றைக்கு பார்க்கிறோம். அதனால் தான் இப்படிப்பட்ட சூழல் வந்திருக்கிறது. ஆனால், செய்தியாளர்களின் கேள்விக்கு நான் பதிலளித்ததை, நான் திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரிப்பது போல ஊடகங்கள் தங்களுடைய விளம்பரத்துக்காக ஒரு மிகப்பெரிய பிரசாரத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.

ராஜினாமாவுக்கு தயார்

கேள்வி : காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கேள்விக்குறியாக இருக்கிறதா?

பதில் : நிச்சயமாக கேள்விக்குறியாகவே உள்ளது. அதனால் தான், எம்.பி.க்கள் மட்டுமில்லாமல் எம்.எல்.ஏ.க்கள் அத்தனை பேரும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு அரசு முன்வரவேண்டும். அப்படியொரு நடவடிக்கை எடுக்கின்றபோது, எதிர் கட்சியாக இருக்கின்ற தி.மு.க. அதனை பின் தொடர நிச்சயமாக தயாராக இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
Leave a Reply