தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர மத்திய அரசுக்கு வேறு மாற்று வழியில்லை.தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி ….

சென்னை,

‘‘காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு காவிரி மேலாண்மை வாரியத்தை, அமைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு மாற்று வழி இல்லை என தமிழ்நாடு அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டது’’ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடந்த கூட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் மத்திய அரசின் மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் உபேந்திரா பிரசாத் சிங் நேற்று முன் தினம் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசு தகவல்

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, காவரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதை அடுத்து, அன்றைய தினமே தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘‘உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசி நடத்திய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

முதல்வரிடம் விவரித்தார்

மத்திய அரசு நடத்திய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முழு விவரத்தையும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எடுத்துரைத்தார். இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

அரசு விரிவான விளக்கம்

இந்நிலையில், தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று பிறப்பித்த இறுதி ஆணையினை எதிர்த்து, கர்நாடகா மற்றும் கேரளா அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் சிவில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. தமிழ்நாடு அரசும் ஒரு சில பாதகமான அம்சங்களை நீக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிவில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், 16.2.2018 அன்று தீர்ப்பு வழங்கியது.

காலக்கெடு இல்லை

இந்தத் தீர்ப்பில், நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் எனவும், காலக்கெடு ஏதும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருமனதாக தீர்மானம்
உச்ச நீதிமன்றத்தின் 16.2.2018-ம் நாளிட்ட தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டம் 22.2.2018 அன்று நடத்தப்பட்டது. அதில், நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும், அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரிநீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை 16.2.2018-லிருந்து 6 வாரத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமரிடம் சொன்னார்

மேலும், 24.2.2018 அன்று ஜெயலலிதா பிறந்த தினத்தில் மானிய விலையில் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்ட துவக்க விழாவிற்கு வந்த பிரதமரிடம் மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, உரிய காலத்திற்குள் அமைத்துத் தருமாறு முதலமைச்சர் நேரில் கேட்டுக் கொண்டார்.

நேரம் கேட்டு கடிதம்

அதன் தொடர்ச்சியாக, 25.2.2018 அன்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகம், நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சர் சென்னைக்கு வந்தபோது, அவரிடம் இதனையே வலியுறுத்தி நேரில் கடிதம் அளிக்கப்பட்டது. மேலும், பிரதமருக்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் தலைமையில் நேரில் சந்தித்து மேற்கண்ட கோரிக்கையினை வலியுறுத்த நேரம் கேட்டு கடிதமும் அனுப்பப்பட்டது.
அழைப்பு கடிதம்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையினை செயல்படுத்துவது குறித்து மத்திய நீர்வள ஆதாரத் துறை செயலாளர், 9.3.2018 அன்று புது டெல்லியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் நீர்வள ஆதாரத் துறை செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது மாநிலங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு 5.3.2018 நாளிட்ட கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டார்.
முதல்வர் அறிவுரை
மத்திய அரசு கூட்டியுள்ள கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் எடுத்துரைக்கப்பட வேண்டிய தமிழ்நாட்டின் நிலை குறித்து விவாதிக்க, முதலமைச்சர் தலைமையில், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் 7.3.2018 அன்று கலந்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசு கூட்டியுள்ள கூட்டத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படியும், அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள 6 வார காலக் கெடுவுக்குள் மத்திய அரசு அமைப்பதற்கு வலியுறுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
நதிநீர் தாவா சட்டம்
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் ஆணைகளை செயல்படுத்துவதற்கு ஒரு, ‘திட்டத்தை’ 6 வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள “திட்டம்” என்னவென்பதை 1956-ம் ஆண்டைய பன்மாநில நதிநீர் தாவா சட்டம் பிரிவு 6(ஏ)(2)ல் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
திட்டம்
இதன்படி, “திட்டம்” என்பது, நடுவர் மன்ற இறுதி ஆணையையும், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் செயல்படுத்த ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அந்த அமைப்பின் உறுப்பினர்கள், அதிகார வரம்புகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை வரையறுக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தெளிவாக உள்ளது
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம், அதன் 16.2.2018 நாளிட்ட தீர்ப்பில், பத்தி 397-ல், நீர்ப் பங்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டதைத் தவிர, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர இனங்களில் மாற்றம் ஏதும் தேவையில்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இது தவிர, பத்தி 399-ல், காவிரி நடுவர் மன்றம், நீர் முறைப்படுத்தும் குழு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் மத்திய நீர்வளக் குழுமம் ஆகியவற்றின் உதவியோடு நீர் விடுவிப்பதை மாதாந்திர வாரியாக கண்காணிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அதிகார வரம்பு
மேற்கண்ட தீர்ப்பின்படி, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட “திட்டம்” என்பது, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு தான் என்றும், அந்த ஆணையில் அதிகார வரம்புகளுடன் இந்த அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக உள்ளது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு அமைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு மாற்று வழி இல்லை என தமிழ்நாடு அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
எடுத்துரைக்கப்பட்டது
எனவே, உச்ச நீதிதின்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் சார்பில் 9.3.2018 அன்று கூட்டப்பட்ட கூட்டத்தில், மேற்கண்ட கருத்துக்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன.
எம்.பி.க்கள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
உறுதியான நடவடிக்கை
காவிரி நதிநீர் பிரச்சினையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட தமிழ்நாடு விவசாயிகளின் நலன்களைப் பேணிப் பாதுகாப்பதற்கும் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக தொடர்ந்து மேற்கொள்ளும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply