தற்போதைய செய்திகள்
Daily-Palemain

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி- அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம். 21-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்……..

புதுடெல்லி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்றும் 21-வது நாளாக முடங்கின. அதைத் தொடர்ந்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தொடர் முடக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கியது. ஆனால், பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதன் காரணமாக, நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்ந்து முடங்கி வருகின்றன.

மேலும் இந்த அமளியால், மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானமும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

அ.தி.மு.க.வினர் அமளி

இந்நிலையில், மக்களவை, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அலுவல் நிரல்கள் எடுத்து வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

‘தமிழகத்துக்கு நீதி வேண்டும்’, ‘தமிழக மக்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அதிமுகவினர் கோஷமிட்டனர். அவர்களை இருக்கைகளுக்குச் செல்லும்படி சுமித்ரா மகாஜன் வேண்டுகோள் விடுத்தார்.

நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஆனால், அவர்கள் அதனைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பின்னர், 12 மணிக்கு அவை கூடியபோதும், அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையில் அமளி நீடித்ததன் காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

மாநிலங்களவையிலும் அதிமுக, தெலுங்கு தேசம், காங்கிரஸ் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

பட்ஜெட் தொடரின் 2-வது அமர்வு

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கி 22 நாட்கள் நடந்தது.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கோரி காங்கிரஸ் எம்.பி.க்களும் நாள்தோறும் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் பெரும்பாலும் முடங்கின.

நேற்றும் அவை தொடங்கியபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் கோபம்

இதனால், கோபமடைந்த, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘‘இன்று தான் அவையின் கடைசி நாள். அனைவரும் இருப்பிடத்தில் அமருங்கள், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

அதற்கு இணங்க மறுத்த எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதியில் நின்றுகொண்டே கோஷமிட்டனர். அதன்பின் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசியதாவது:-

127 மணி நேரம் வீண்

‘‘பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்வில் 34 மணிநேரம் 5 நிமிடங்கள் மட்டுமே அவை செயல்பட்டது. ஏறக்குறைய 127 மணிநேரம் 45 நிமிடங்கள் குழப்பத்தாலும், அமளியாலும் வீணாகி இருக்கிறது. 9 மணிநேரம், 47 நிமிடங்கள் அரசின் அவசர காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் எழுப்பிய 580 கேள்விகளுக்கு 17க்கு மட்டுமே பதில் அளிக்கப்பட்டுள்ளது. 6,670 கேள்விகள் இந்த கூட்டத்தொடரில் எழுத்து மூலம் கேட்கப்பட்டன. இந்த கூட்டத்தொடரில் 5 மசோதாக்கள் மட்டுமே நிறைவேறின, 5 மசோதாக்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டன.

மசோதாக்கள்

நிதி மசோதா 2018, பணிக்கொடை திருத்த மசோதா, சிறப்பு நிவாரண திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் ஏறக்குறைய 10 மணி நேரம் 43 நிமிடங்கள் நடந்துள்ளது. பட்ஜெட் மீதான விவாதம் 12 மணிநேரம் 13 நிமிடங்கள் நடந்துள்ளது.

மக்களின் நலன் சார்ந்த விஷயங்கள், பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளை எம்.பி.க்கள் எழுப்பி ஆக்கபூர்வமாக விவாதம் செய்ய இந்த அவை சிறந்த அடித்தளத்தை அமைத்துத் தருகிறது. பல்வேறு மக்கள் பிரச்சினைகளை இந்த அவையில் தீர்வு காண முற்பட்ட உறுப்பினர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.”

இவ்வாறு சுமித்ரா மகாஜன் பேசினார்.

இரு அவைகளும் ஒத்தி வைப்பு

நேற்றுடன் பட்ஜெட் தொடரின் 2-வது அமர்வு முடிவடைந்ததால், இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

ரூ.190 கோடி இழப்பு

நாடாளுமன்றம் நடத்துவதற்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.2.5 லட்சம் செலவாகிறது. குறைந்தபட்சம் 6 மணிநேரமாவது இரு அவைகளும் நடத்தப்பட வேண்டும்.

அப்படியென்றால் நாள் ஒன்றுக்கு நாடாளுமன்றத்தை நடத்த ரூ.9 கோடி செலவாகிறது. கடந்த 21 நாட்கள் அவை முடக்கத்தினால் ஏறக்குறைய மக்களின் வரிப்பணம் ரூ.190 கோடி வீணாகியுள்ளது.

அரசியல் பழிவாங்கல்

நாடாளுமன்ற முடக்கம் என்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது பாஜகவினர் முடக்குவதும், பாஜக ஆட்சியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் முடக்குவதும் அரசியல் பழிவாங்கலாகவே இருந்து வருகிறது.

1980-களில் காங்கிரஸ் ஆட்சியில் போபர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம் தலைதூக்கியபோது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை 45 நாட்கள் புறக்கணித்தன.

2 ஜி ஊழல்

மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் ஆட்சியில், லஞ்சம் வாங்கியதாக அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராம் கையும் களவுமாகப் பிடிபட்டபோது, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் 15 நாள் அவை நடவடிக்கையை புறக்கணித்தன.

இதேபோல, பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின்போது தெஹல்கா பத்திரிகை அம்பலப்படுத்திய ஊழலாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி ஊழல் விவகாரம் வெளியானபோதும் மழைக் கால கூட்டத் தொடரில் தொடர்ந்து 11 நாட்கள் நாடாளுமன்றம் முடங்கியது.
Leave a Reply