தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி-பேரணியாக சென்று மறியல் செய்த மு.க.ஸ்டாலின் கைது போலீசார்-தி.மு.க.வினரிடையே தள்ளுமுள்ளு….

சென்னை,

காவிரி மேலாண்ைம வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று போலீசார் கைது செய்தனர். இதனால், போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சிறைநிரப்பும் போராட்டம்

உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர்ப் பங்கீட்ைட முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. மேலும், அதற்காக ஆறு வாரகால அவகாசமும் அளித்தது.

ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

சாலை மறியல்

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், மத்திய அரசு காவிரி இறுதித்தீர்ப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மூன்று மாதகால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மத்திய அரசின் இந்த செயல் தமிழக மக்களிடையேயும், அரசியல் கட்சியினரிடையேயும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஞாயிறன்று அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டம் முடிவடைந்த பிறகு, மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தி.மு.க.வினர் தினந்தோறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்தார். பின்னர், மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சியினரும் தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மு.க.ஸ்டாலின் திடீர் மறியல்

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.

கருப்புக்கொடியுடன் பேரணி

அவருடன் தி.க.தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்பட பலரும் அவருடன் பங்கேற்றனர். மு.க.ஸ்டாலினின் இந்த திடீர் சாலை மறியலினால், அங்கு சிறிது நேரத்தில் தி.மு.க. தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். மேலும், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டனர். இதனையடுத்து, ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன், மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி பேரணியாக சென்றார். அப்போது, மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு என்று கருப்புக்கொடி ஏந்தியபடி சென்றார்.

கைது

சேப்பாக்கம் மைதானம் அருகில் மு.க.ஸ்டாலின் மற்றும் மற்ற தலைவர்களை போலீசார் மேலும் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.வி.தங்கபாலு உள்ளிட்ட அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலினை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்ற முயற்சித்தனர். ஆனால், அவர் மறுத்ததால் போலீசார் அவரை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினார். மேலும், திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.வி.தங்கபாலு உள்ளிட்டோரையும் கைது செய்தனர்.

தள்ளுமுள்ளு

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கோபமடைந்த தி.மு.க. தொண்டர்கள் மு.க.ஸ்டாலினை கைது செய்யக்கூடாது என்று கோஷம் எழுப்பினர். இதனால், போலீசாருக்கும், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரையும் புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்தனர். பின்னர், அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.
Leave a Reply