தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி-ஆளுநருடன் முதல்வர் திடீர் சந்திப்பு. போராட்டம் குறித்து ஆலோசனை…

சென்னை,
டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அவகாசம் கேட்கும் மத்திய அரசு

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும், அதை மத்திய அரசு செயல்படுத்தாத நிலையில் 6 வார காலக்கெடு முடிந்தது. இந்த நிலையில் தான் மத்திய அரசு, ‘ஸ்கீம்’ (திட்டம்) குறித்து விளக்கம் கேட்டும், கால அவகாசம் கேட்டும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு தாக்கல் செய்வதற்கு முன்தாக தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தது.
அ.தி.மு.க. உண்ணாவிரதம்

இந்த சூழ்நிலையில்தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம், சாலை மறியல், கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான போராட்டங்கள் வெடித்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும் நேற்று முன் தினம் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. சென்னையில் நடந்த உண்ணாவிரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட தலைநகரங்களில் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

தி.மு.க.- எதிர்க்கட்சிகள் போராட்டம்

அதே நேரத்தில், திமுக-காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தினமும் ஏதாவது ஒரு போராட்டம் அறிவித்து நடத்தி வருகிறது. அடுத்த வாரம் சென்னையில் நடக்கும் ராணுவ தளவாடக் கண்காட்சியில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டவும் முடிவெடுத்துள்ளனர்.
மாநிலம் முழுவதும்

காவிரி பிரச்னைக்காக மாநிலம் முழுவதும் போராட்டம் வலுத்து வருவதையொட்டியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரியும், நீயூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடக்கும் போராட்டங்களையொட்டியும், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், போலீஸ் டிஜிபி ராஜேந்திரன், உள்துறைச் செயலாளர் ஆகியோரை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அழைத்து ஆலோசனை நடத்தினார். தவிர சில நாட்களுக்கு முன் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினை ஆளுநர் அழைத்து ஆலோசனை நடத்தினார்.

டெல்லி விரைந்தார்

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரு தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றார். டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தற்போது தமிழகத்தில் நிலவும் சூழ்நிலைகள் குறித்த விவரங்களை பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் ஆளுநர் தெரிவித்தாக கூறப்படுகிறது. டெல்லிக்கு வந்த ஆளுநரை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் சந்தித்துப் பேசினார்.
திடீர் சந்திப்பு

ஆளுநர் தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன் தினம் சென்னை திரும்பினார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிக்கைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் விவரம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. தற்போது, தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆளுநரும்-முதல்வரும் ஆலோசித்தாக கூறப்படுகிறது.

முதல்வர் பேட்டி

ஆளுநருடன் சந்திப்பு முடிந்ததும் முதல்-அமைச்சர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாக பேசினோம், எங்களுடைய பதிலை தெரிவித்தோம். ஆளுநர் எங்களுடைய விளக்கத்தில் திருப்தி அடைந்தார். பதில் திருப்தியாக இருப்பதாக தெரிவித்தார். தண்ணீர் பிரச்சினை பற்றியும் நாங்கள் பேசினோம். எங்களுடைய கருத்துக்களை மிகவும் உன்னிப்பாக கவனித்தார். காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக நடைபெறும் போராட்டம் தொடர்பாகவும் பேசினோம். உரிய பதிலை தெரிவித்தோம். தமிழக நிலவரம் தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்தோம். இவ்வாறு முதல்-அமைச்சர் பழனிசாமி கூறினார்.
Leave a Reply