தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உண்ணாவிரதம் சென்னையில் முதல்வர்-துணை முதல்வர் பங்கேற்பு…..

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில், நேற்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது தெரிந்தது. ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், 6 வார காலக்கெடுமுடிந்த பிறகு, உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ‘ஸ்கீம்’ (திட்டம்) குறித்து விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த 4 தினங்களுக்கு மனு தாக்கல் செய்தது. அதே நேரத்தில் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் ஏப்ரல் 3-ந் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்தது. உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகளின் பட்டியலையும் அந்த கட்சி அறிவித்தது.

அதன்படி, அ.தி.மு.க. சார்பில், நேற்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடந்தது. சென்னை மாவட்டத்தின் சார்பில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அதிமுக எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

எஸ்.பி.வேலுமணி

கோவை காந்திபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் நடந்த உண்ணாவிரதத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். இதில் அந்த மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் நடந்த உண்ணாவிரதத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.

சி.வி.சண்முகம்

கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் சார்பில் கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் நடந்த உண்ணாவிரதத்திற்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான செம்மலை தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர், புறநகர் மாவட்டத்தின் சார்பில் ரெயில் நிலையம் அருகில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடந்த உண்ணாவிரதத்திற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

இப்படி, ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் அ.தி.மு.க. சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமைக் கழக நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான தங்களது கண்டனத்தை வெளிபடுத்தினர். மாலையில் பழச்சாறு அருந்தி உண்ணாவிரதத்தை முடித்தனர்.

உண்ணாவிரதத்திற்கு திடீர் வருகை

அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் உண்ணாவிரத போராட்டத்தில் யார், யார் கலந்து கொள்வார்கள் என்ற பெயர் பட்டியலை அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது பெயர் அறிவிக்கப்படவில்லை. முதல்வரும்-துணை முதல்வரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளமாட்டார்களா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நடந்த உண்ணாவிரத பந்தலுக்கு நேற்று காலை 8.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று வந்தனர். பின்னர் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து மேடையில் அமர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Leave a Reply