தற்போதைய செய்திகள்
bandh

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு வீதிகள் வெறிச்சோாடியது……

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் மேலாண்மை வாரியம் உடனே அமைக்க கோரியும் தமிழ்நாடு முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கடை அடைப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது. அது போல தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முழு கடையடைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகளை அடைத்து வியாபாரிகள் மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
சென்னையில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கோயம்பேடு மார்க்கெட்டில் 2500 கடைகள் முழுவதும் மூடப்பட்டு இருந்தது. இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியூர்களில் இருந்து காய்கறி, பழங்கள் ஏற்றி வந்த லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
சென்னை நகரில் முக்கிய பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஓட்டல்கள் உள்பட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. மருந்து கடைகளும் மூடப்பட்டன. அதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மதுரை
மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து வழக்கம் போல இருந்தாலும், கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மதுரையில் முக்கிய பகுதியான விளக்குத்தூண், மேலமாசி வீதி, கீழமாசி வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாபாரிகள் கடைகளை அடைத்து மத்திய அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சென்ட்ரல் மார்க்கெட்டிலும் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,500 மருந்து கடைகள், 4 ஆயிரம் ஓட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள், பர்னிச்சர் கடைகள், காய்கறி, அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை கடைகள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடந்தன. இது தொடர்பாக முன்கூட்டியே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் நேற்று 100 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட், உக்கடம் ராமர் கோவில் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளிலும் மளிகை கடைகள் மூடப்பட்டிருந்தன. இதே போல் பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், மதுக்கரை, அன்னூர், வால்பாறை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
குமரி மாவட்டம்
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஊட்டி நகரில் அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தது. மார்க்கெட்டும் செயல்படவில்லை. ஓட்டல்கள், சாலையோர கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.
குமரி மாவட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. நாகர்கோவிலில் கோட்டார், வடசேரி, செட்டிக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 70 சதவீதம் வியாபாரிகள் கடைகளை அடைத்து தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தனர். தலக்குளம், வில்லுக்குறி, சுங்கான்கடை பகுதியில் பல கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
தக்கலை, மேட்டுக்கடை பகுதியில் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. குலசேகரம் பகுதியிலும் ஒரு சில கடைகள் மூடப்பட்டு இருந்தது. களியக்காவிளை, படந்தாலுமூடு, குழித்துறை பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல திருவட்டார், ஆற்றூர், வேர்கிளம்பி, பூவன்கோடு, புத்தன் கடை பகுதிகளிலும் கடைகளை அடைத்து போராட்டம் நடந்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் தற்போது காவிரி விவகாரத்தில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து எழுச்சி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
100 சதவீதம் வெற்றி
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கே.எம்.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கடை அடைப்பு போராட்டம் நேற்று 100 சதவீத அளவிற்கு வெற்றி அடைந்துள்ளது. தமிழ் நாடு முழுவதும் 21 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
காவிரி பிரச்சினையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வியாபாரிகள் அனைவரும் ஒன்றுபட்டு கடை அடைப்பு செய்துள்ளனர். ஓட்டல்கள் சங்கம், மருந்து வணிகர்கள் சங்கம், காய்கனி வியாபாரிகள் சங்கம், ஜவுளி, நகைக்கடை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பில் பங்கேற்று உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply