தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் கோரிக்கை வலுக்கிறது-போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவ- மாணவிகள் தமிழகம் முழுவதும் தீவிரமடைகிறது….

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலக்கெடு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார காலக்கெடு முடிவடைந்து விட்டது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. தற்போது மேலும் 3 மாதம் கால அவகாசம் கேட்கிறது. கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜ.வின் வெற்றி பாதிக்கப்படும் என்ற காரணத்தாலேயே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்துவதாக தமிழக அனைத்து அரசியல் கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

போராட்டம்

மத்திய அரசின் பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தில் விவசாய சங்கங்கள், அனைத்து அரசியல் கட்சியினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ரெயில் மறியல், விமான நிலையம் முற்றுகை, வியாபாரிகள் கடையடைப்பு, பந்த் போன்ற தொடர் போராட்டங்களை அறிவித்து களத்தில் குதித்துள்ளன. இதனால் தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் கடந்த 31-ந் தேதி மாணவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தினர். இதனால் மீண்டும் மாணவர்கள் போராட தொடங்கி விட்டதால் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் கூடும் இடங்களை கண்டறிந்து அங்கு கட்டுபாடுகளை விதித்து போலீசாரை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அரசு கல்லூரி

இந்நிலையில் மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணிப்பு செய்து கல்லூரி வாயிலில் திரண்டனர்.ஒருசில நிமிடங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மாணவர்கள் கல்லூரி முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தின்போது மாணவர்கள் பலர் விவசாயிகள் போல் பச்சைத்துண்டு அணிந்தும், பச்சை துண்டால் தலைப்பாகை கட்டிக்கொண்டும் ஆவேசத்துடன் விவசாயிகளுக்கு ஆதரவாக கோ‌ஷமிட்டனர். இதையடுத்து அங்கு அப்பகுதி மக்களும் திரண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மாணவர்களின் திடீர் போராட்டத்தால் மன்னார்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.

நூதன போராட்டம்

தஞ்சையை அடுத்த வல்லம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் மாணவர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் சிலர் பச்சை துண்டால் கழுத்தில் சுருக்குமாட்டியபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் சிலர் சாலையில் படுத்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.இது குறித்து தகவல் அறிந்ததும் வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானம் செய்தனர். அதன் பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்.

பதாகைகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மே 17 இயக்கத்தினர் மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி சந்திப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு இயக்க ஒருங்கிணைப்பாளர் மகாமுனி தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். அதனை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கைகளில் ஏந்தியபடி நின்றனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Leave a Reply