தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு தீவிரமடையும் போராட்டம்-தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்…..

சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் திடீரென்று  டெல்லி விரைந்தார். அங்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து தமிழக நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
அவமதிப்பு வழக்கு
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. 6 வார கெடு முடிந்த நிலையில், தீர்ப்பிலுள்ள ‘ஸ்கீம்’ (திட்டம்) குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இன்னொரு பக்கம், மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

தீவிரமடைந்த போராட்டம்

இந்நிலையில், காவிரி பிரச்னையீல் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துவிட்டது என்று கூறி தமிழக முழுவதும் சாலை மறியல் போராட்டம், மத்திய அலுவலகங்கள் முற்றுகை, பஸ் மறியல், ரெயில் மறியல் போராட்டம், கடைஅடைப்பு போராட்டம் என பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தி வருகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற கோரி ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடக்கவுள்ளது. இதற்கிடையே, பிரதான எதிர்கட்சியான தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளும் போரட்டம் நடத்தி வருகிறது. இன்னொரு விவசாய சங்கத்தினரும், கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் போராட்டம் தீவரமடைந்துள்ளது.
50 நாட்கள் 
இது ஒருபுறம் இருக்க, வாழ்வாதாரத்தையே நசக்ககூடிய வகையில் இயங்கி வரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த 50 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக அந்த மாவட்ட கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்தில் இறங்கி உள்ளனர். இந்த போராட்டங்களுக்கு இடையே, தேனி மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தினால் அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது இயற்கை சூழலுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் என்று அந்த பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தலைமைச் செயலாளர்

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று முன் தினம் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார். அவருடன் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு பகல் 12.30 மணி முதல் 1 மணி வரை நடந்தது.

மத்திய அமைச்சருடன் சந்திப்பு

அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர்ந்தது பற்றியும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருவதைப்பற்றியும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்களிடம் கேட்டறிந்தார். இந்த போராட்டங்களினால் சட்டம்-ஒழுங்கு பாதிக்குமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது
இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, தமிழகத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்து விரிவாக எடுத்துரைப்பார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
Leave a Reply