தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினை – தமிழகத்தில் நாளை முதல் தொடர் போராட்டம்……

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

இந்த விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு காவு வாங்கி விட்டதாகவே தமிழக தலைவர்களும், விவசாயிகளும் குற்றம் சாட்டி உள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக சுப்ரீம்கோர்ட்டு விதித்த 6 வார கெடு முடிவடைந்த நிலையில், மத்திய அரசு மேலும் 3 மாதம் கால அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருப்பது ஏமாற்று வேலை என்றும், காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்தே பா.ஜனதா அரசு செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து ஆளும் கட்சியான அ.தி.மு.க., எதிர்க் கட்சியான தி.மு.க. ஆகியவை போராட்டங்களை அறிவித்துள்ளன. வணிகர் சங்கங்களின் சார்பில் கடை அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளைமுதல் தொடர் போராட்டங்கள் நடை பெறுகின்றன. அ.தி.மு.க. சார்பில் நாளை (3-ந்தேதி) தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் கோகுலஇந்திரா மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கிறார்கள். இதே போல மாவட்ட தலை நகரங்களிலும் போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறும்போது, “காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் இந்த போராட்டம் நடை பெறுவதாக” கூறியுள்ளார்.

விவசாயிகள் சங்க பிரதிநிதிகளான அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் தலைமையில் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் நாளை போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி.தினகரன் பங்கேற்கிறார்.

நாளை ஒரேநாளில் மட்டும் 3 போராட்டங்கள் நடைபெறுகின்றன.

தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் முழு அடைப்பு போராட்டம் 5-ந் தேதி (வியாழக்கிழமை) நடை பெறுகிறது. காவிரி பிரச்சினைக்காக நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

முழு அடைப்பையொட்டி பஸ்-ரெயில்களை மறித்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் 5-ந் தேதி நடைபெற உள்ள முழு அடைப்பு மாநிலம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தே.மு.தி.க. சார்பில் திருவாரூரில் 6-ந்தேதி போராட்டம் நடைபெறுகிறது. இதில் பிரேமலதா பங்கேற்கிறார். இந்த போராட்டத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வருகிற 11-ந்தேதி வணிகர் சங்க பேரவை சார்பில் கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் வெள்ளையன் கூறும்போது, “மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி சென்னை வரும் நாளான ஏப்ரல் 11-ந்தேதி அன்று கடை அடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்புக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை” என்றார்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒருங்கிணைப்பாளராக உள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பிலும் 11ந்தேதி பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் 32 விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். அன்றைய தினம் பஸ்-ரெயில் மறியல் போராட்டங்களை நடத்தவும் இந்த சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

நாளை முதல் 11-ந்தேதி வரை காவிரி பிரச்சினைக்காக தொடர் போராட்டங்கள் நடைபெற உள்ளதால் தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை பகுதிகளில் நேற்று முன் தினம் நடைபெற்ற திடீர் போராட்டம் எதிரொலியாக இன்று 2-வது நாளாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடற்கரையில் இளைஞர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு கோபுரங்களை அமைத்தும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
Leave a Reply