தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அனைத்துக்கட்சி போராட்டம் தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்….

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சி போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி தீர்ப்பு

தமிழகத்துக்கும், கர்நாடகாவிற்கும் காவிரி நீரைப் பங்கீட்டுக்கொள்வது குறித்து பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு, கடந்த பிப்ரவரி மாதம் 16ந் தேதி அளிக்கப்பட்டது. அதில், தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நீரை 192 டி.எம்.சி.யில் இருந்து 177.25 ஆக குறைத்து உத்தரவிட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு ஆறு வாரகாலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மத்திய அரசு மறுப்பு

இதனையடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனையடுத்து, தமிழக அரசின் சார்பில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில், அனைத்துக்கட்சித் தலைவர்களும் பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ப்பட்டது. ஆனால், பிரதமர் தமிழக தலைவர்களை சந்திக்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிதின்கட்காரி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்றும், மத்திய நீர்வளத்துறை செயலாளர் உச்சநீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற வார்த்தையே இல்ைல என்றும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இதனையடுத்து, தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

செயற்குழு கூட்டம்

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்தது. ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை இதுவரை அமைக்கவில்லை. இதனையடுத்து, காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தி.மு.க. செயற்குழு கூட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி, தி.மு.க. செயற்குழு கூட்டம் அந்த கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று காலை 10 மணியளவில் தேனாம்பேட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எவ்வாறு நெருக்கடி அளிப்பது என்று தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

அனைத்துக்கட்சி போராட்டம்

இந்தக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை அமைப்பது தொடர்பாக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், தமிழகத்தின் ஒற்றுமையை மத்திய அரசுக்கு எடுத்துக்காட்ட வேண்டும். எனவே, அனைத்துக் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டும் தி.மு.க. விரும்புகிறது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, அதன்படி அடுத்தகட்ட போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தில் துரைமுருகன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம் – ஸ்டாலின் பேட்டி (பாக்ஸ்)

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் பேசும்போது, காவிரி விவகாரத்தில் தி.மு.க.வுடன் ஒரே கருத்துடைய அனைத்துக்கட்சிகளையும் ஏப்ரல் 1ந் தேதி கூட்டி, போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆலோசிக்கப்படும். வரும் 15ந் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல்கள் வந்துள்ளது. அப்போது, அவருக்கு தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும்.

காவிரி விவகாரம் தொடர்பாக, நேற்று(நேற்று முன்தினம்) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன பேசினார்கள் என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை. காவிரி விவகாரம் தொடர்பாக, பிரதமரைச் சந்திக்க தி.மு.க. சார்பில் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அவர் பதிலளிக்கவில்லை. அ.தி.மு.க. எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தால், அடுத்த நிமிடமே தி.மு.க. எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் ராஜினமா செய்வார்கள். ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு மக்கள் அழைத்தால், நிச்சயம் செல்வேன்.

தீர்மானங்கள்

தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும். கூட்டுறவுச் சங்கத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ மேற்படிப்பில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு கண்டனம். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Leave a Reply