தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால்-மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு? முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு….

சென்னை,

உச்சநீதிமன்றம் விதித்த 6 வாரக் காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டதால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

நடுவர் மன்றம் தீர்ப்பு

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பில், ‘தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் விடுவதை உறுதி செய்திட, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தையும் மத்திய அரசு அமைக்க வேண்டும்’ என்று கடந்த 2007-ம் ஆண்டு அறிவித்தது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

பிப்.16-ல் தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த பிப்ரவரி 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில், ‘நடுவர் மன்றம் தமிழகத்திற்கு வழங்கிய 192 டி.எம்.சி. தண்ணீர் அளவை குறைத்து 177 டி.எம்.சி.யாக குறைத்தும் கர்நாடகத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்தும்’ உத்தரவிட்டது. மேலும், தீர்ப்பு வழங்கிய நாளில் இருந்து 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை ஆணையத்தையும் அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டு உத்தரவிட்டது.

ஒட்டுமொத்த தமிழகம்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு மட்டுமல்லாதது, ஒட்டுமொத்த தமிழகமும் மத்திய அரசுக்கு பல்வேறு வகையான அழுத்தத்தை கொடுத்து வருகிறது. இதற்கிடையே, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், சம்மந்தப்பட்ட நான்கு மாநில அரசு அதிகாரிகளை டெல்லிக்கு அழைத்துபேசியது. இந்த கூட்டத்திலும் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பும் தமிழக அரசு அதிகாரிகள் டெல்லியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே முடிவான வழி என்று தமிழக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

மத்திய அரசு ஏற்கவில்லை

தமிழக அரசின் கோரிக்கையை எந்த வகையிலும் மத்திய அரசு ஏற்கவில்லை. மேலும், தமிழகத்திற்கும்-கர்நாடகத்திற்கும் கருத்து வேறுபாடு உள்ளது. இதற்கு தீர்வு காண கோரி உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு அணுக இருப்பதாக நேற்று முன் தினம் தகவல்கள் வெளியானது. இப்படிப்பட்ட நிலையில் தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார காலகெடு நேற்றுடன் முடிந்துவிட்டது.

விளக்கம் கேட்க போகிறது

ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. அதே நேரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ’ஸ்கீம்‘ (திட்டம்) தொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவசர ஆலோசனை
இந்த சூழ்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று சென்னை கோட்டையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சட்டரீதியாக நடவடிக்கை

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைப்படுத்தாவிட்டால், தமிழக அரசு சார்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டபோது அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவமதிப்பு வழக்கு

இந்த கூட்டத்தில், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமனதாக முடிவு எடுக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வரும் சனிக்கிழமையன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply