BREAKING NEWS

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் – ஜூலை 2-ந் தேதி நடைபெறுகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ந் தேதி ஆணையத்தின் தலைவர் மசூது உசைன் தலைமையில் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

காவிரி

தமிழ்நாடு – கர்நாடகா இடையில் நடக்கும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை நடைமுறைபடுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் சாலை மறியல் கடை அடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்தநிலையில் மத்திய அரசு காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் சில திருத்தங்களை செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் பின்னர் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி வரைவு செயல் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், உடனே இதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

ஆணைய தலைவர்

இதை தொடர்ந்து மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை அமைத்து மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. மேலும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக மசூத் உசேன் நியமனம் செய்யப்பட்டார்.

தமிழக உறுப்பினராக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் தேர்வு செய்யப்பட்டார் மேலும் கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் உறுப்பினர்களை நியமித்த நிலையில் கர்நாடகம் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினரை நியமிக்காமல் இருந்தது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என முட்டுக்கட்டை போட்ட கர்நாடக மாநில முதல்-அமைச்சர் குமாரசாமி.

முதல்-அமைச்சர்

இந்தநிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் அமைப்பின் 4-வது நிர்வாக கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்கமுறை குழு ஆகியவை தனது பணியை உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எம்.பி.க்கள் கூட்டம்

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக மாநில உறுப்பினராக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ்சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். மேலும், காவிரி ஒழுங்காற்று குழுவின் கர்நாடக உறுப்பினராக பிரசன்னா நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும், ‘காவிரி ஆணைய விவகாரத்தில் 3 நாளில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் கர்நாடக மாநில எம்.பி.க்களும் கலந்து கொள்வார்கள்’ என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை மாதம் 2-ந் தேதி ஆணையத்தின் தலைவர் மசூது உசைன் தலைமையில் நடக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக 4 மாநிலங்களுக்கும் இன்று (செவ்வாய் கிழமை) இதற்கான அழைப்பிதல் அனுப்பப்படும் என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply