தற்போதைய செய்திகள்

காவிரி பிரச்சினையில் தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்றிவிட்டது தலைவர்கள் கண்டனம்….

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட 6 வார கால அவகாசம் நேற்றுடன் முடிவடையும் நிலையில், மத்திய அரசு அதை அமைக்காமல், திட்டமிட்டே கால தாமதம் செய்து தமிழக மக்களை ஏமாற்றிய மத்திய அரசுக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கண்டனம்
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை, கெடுவிற்குள் மத்திய அரசு வெளியிடாதது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. கர்நாடக பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதா என்ற ஐயத்தையும் அவர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. இது ஒட்டுமாத்த தமிழக மக்களை வஞ்சித்துவிட்டதாக கருதுவதால், இதற்கு தே.மு.தி.க சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்‍.

கூட்டாட்சி

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ:

கர்நாடக மாநில தேர்தல் லாபங்களை முன்வைத்து பா.ஜ.க நடத்திய நாடகம் இப்போது அம்பலமாகி விட்டது. தமிழக மக்களையும், தமிழக விவாசாயிகளையும் அநாதைகளைப் போல பாவித்து, கூட்டாட்சி தத்துவத்தின் நீதியை மத்திய அரசு தகர்த்திருக்கிறது. தமிழக அரசு இனியும் ஏமாறாமல் துரிதமாக, சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

த.மா.கா தலைவர் ஜி.கே வாசன்:

தர்மத்திற்கும், நியாயத்திற்கும் நம்பிக்கை இருக்கின்ற வேளையில், சட்டம் தமிழக விவசாயிகள் பக்கம் இருக்கின்ற போது – மத்திய பா.ஜ.க அரசு அதனைச் சார்ந்து செயல்படாமல் இருந்தது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அமைக்க வேண்டும்.
கறுப்புக்கொடி
பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:

உச்ச நீதிமன்ற கெடு படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து விட்டது. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, இன்று முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த வேண்டும்.

முற்றுகை
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா:

மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவைச் சற்றும் கண்டுகொள்ளாமல், தமிழகத்திற்குத் துரோகம் இழைத்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் காவிரியில் மேலாண்மை வாரியத்தை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடுக்கப்பட்ட கெடுவிற்குப் பிறகும் அதை ஏற்க மறுப்பது தமிழகத்திற்கு மத்திய அரசு இழைக்கும் பச்சைத் துரோகமாகும். இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சியின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியாவது தமிழகத்தின் உரிமையை வென்றெடுக்க வேண்டும்.
கண்ணீர்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன்:

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு கர்நாடகாவிற்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை மேற்கொள்வது தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் இழைக்கும் செயல். நீதிமன்ற உத்தரவை கர்நாடக சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக மத்திய அரசு அவமதித்ததை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
கவிஞர் வைரமுத்து:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியைக் கிழித்து விட்டது. மத்திய அரசோ, கிழிந்த வேட்டியையும் பறிக்கப் பார்க்கிறது. உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும். கண்ணீர் வற்றிப்போனத் தமிழ்நாட்டு உழவர்களின் கண்களில் ரத்தம் கசிவதற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்று ஒரு விவசாயி மகனாகக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.
Leave a Reply