BREAKING NEWS

காவிரி, கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

 

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 76,611 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி, கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை

கர்நாடக மாநிலத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 25 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கேஆர்எஸ், கபினி, ஹாரங்கி மற்றும் ஹேமாவதி ஆகிய 4 அணைகளும் முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் கேஆர்எஸ், கபினி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் அதிகளவில் வெளி யேற்றப்படுகிறது.

இந்த உபரிநீர் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, கடந்த 23-ந் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 120.40 அடியாக இருந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி 120.22 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 93.82 டி.எம்.சி.யாக உள்ளது.

டெல்டா பாசனம்

அணைக்கு விநாடிக்கு 80,291 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. அணை நிரம்பியதையடுத்து, காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 76,611 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 54,111 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நீர்மின் நிலையம் வழியாக விநாடிக்கு 22,500 கனஅடி வீதம் தண்ணீர் செல்கிறது. இதேபோல், கிழக்கு-மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்காக 780 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து 76,611 கனஅடி தண் ணீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.

எச்சரிக்கை

இதனால் தொடர்ந்து 4-வது நாளாக நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்பட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வருவாய்த்துறை மற்றும் போலீஸ் சார்பில் காவிரி கரை யோர மக்களுக்கு தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், மேட்டூர், மேச்சேரி, இடைப்பாடி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஒகேனக்கல்

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று காலை நிலவரப்படி 80,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 70,000 கனஅடியாக சரிந்தது. தொடர்ந்து, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்டவை கண்ணுக்கு தெரியாத வகையில் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளன. இதனால் 19வது நாளாக ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடித்தது.

இந்நிலையில், திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 42 ஆயிரம் கன அடியும், காவிரியில் 30 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்படுவதால் காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




Leave a Reply