BREAKING NEWS

காவல் நிலையங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க  475 காவல் நிலையங்களில் நிறுவப்படுகிறது – முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.


 

காவல் நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக 475 காவல் நிலையங்களுக்கு இணையதள முறைமை கேமராவுடன் கூடிய உட்சுற்று கண்காணிப்பு தொலைக்காட்சி சாதனங்கள் ரூ.14.25 கோடியில் நிறுவப்படும் என்று முதல்வர்  சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

வாத்தியக்குழுக்கள்

சட்டசபையில் காவல்துறையில் மானியக்கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துபேசினார். அப்போது, அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

ரூ.3.31 கோடி செலவில், அனைத்து மாவட்ட மற்றும் சிறப்பு படைப்பிரிவுகளில் காவல் வாத்தியக் குழுக்கள் உருவாக்கப்படும். ரூ.4.20 கோடி செலவில், காவலர்களின் பயிற்சிக்காக ரெமிங்டன் கன், அன்டர் பேரல் கிரினேடு லான்ஞ்சர், மல்டி செல் லாஞ்சர், கேஸ் கன், சப் மெஷின் கன் போன்ற

19 வகையான சிறப்பு படைக்கலன்கள் வாங்கப்படும்.

மகளிர் காவல்நிலையம்

திருச்செந்தூர், கூடலூர் மற்றும் நெய்வேலி ஆகிய 3 காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான முகாம் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகள் ரூ.2.67 கோடி செலவில் கட்டப்படும். ரூ. 89 லட்சத்தில் வாழப்பாடியில் புதியதாக அமைக்கப்படவுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கான கட்டடம் கட்டப்படும்.

புதிய கட்டிடங்கள்

ரூ.31.44 கோடி செலவில், ஆவடியிலுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13-ஆம் அணிக்கு (தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை) நிர்வாக அலுவலக கட்டடம், பாளையங்கள், ஆயுத வைப்பறை, மேற்கூறையுடன் கூடிய வாகனம் நிறுத்துமிடம் மற்றும் பணிமனை ஆகியவை கட்டப்படும். ரூ. 91.61 லட்சம் செலவில், சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் புதியதாக அமைக்கப்படவுள்ள காவல் நிலையத்திற்கான கட்டடம் கட்டப்படும். திருப்பூர் மாநகரம், திருமுருகன் பூண்டியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காவல் நிலையத்திற்கான கட்டடம் ரூ.1 கோடியில் கட்டப்படும்.

ரூ. 13.67லட்சம் ரூபாய் செலவில், நாகப்பட்டினம் மாவட்டம், ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் புதிய பாதாள கழிவுநீர் வடிகால் குழாய் அமைக்கப்படும்.

அடிப்படை சாதனங்கள்

வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் 3 கருவிகள் ரூ.45 லட்சத்தில் வாங்கப்படும். ரூ. 12 லட்சம் செலவில், ஆழமாக புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் 4 கருவிகள் வாங்கப்படும். ரூ.34 லட்சம் செலவில், ஊடுகதிர் மூலம் கண்டறியும் 2 கருவிகள் வாங்கப்படும். ரூ.98 ஆயிரம் செலவில், வாகனத்தின் கீழ் தேடும் 14 கண்ணாடிகள் வாங்கப்படும். ரூ.4.95 லட்சம் செலவில், 55 தேடுதல் பணிக்கான விளக்குகள் வாங்கப்படும். ரூ.3 லட்சம் செலவில், 2 பகல் நேர கண்காணிப்பு தொலைநோக்கு கருவிகள் வாங்கப்படும். ரூ. 15.60 லட்சம் செலவில், 2 இரவு நேர கண்காணிப்பு தொலைநோக்கு கருவிகள் வாங்கப்படும். ரூ.5.05 கோடி செலவில், பணித்திறன் மேம்பாட்டிற்காக காவல் நிலையங்களுக்கென அடிப்படைச் சாதனங்கள் வாங்கப்படும்.

டிஜிட்டல் சாதனங்கள்

ரூ.12.20 கோடி செலவில், 9 சென்னை மாநகர காவல் படை, 6 மற்ற மாநகர காவல் படை, 31 மாவட்ட காவல் படை மற்றும் 9 தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆகமொத்தம் 55 இடங்களில் உள்ள அதிவிரைவு படைக்கு 14 வகையான சாதனங்கள் வாங்கப்படும். ரூ.4.07 கோடி செலவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் டிஜிட்டல் முறையிலான முழு தகவல் தொடர்பு சாதனங்கள் நிறுவப்படும். ரூ. 4.08 கோடி செலவில், திருவள்ளூர் மாவட்டத்தில் டிஜிட்டல் முறையிலான முழு தகவல் தொடர்பு சாதனங்கள் நிறுவப்படும். ரூ. 4.37கோடி செலவில், மதுரை மாவட்டத்தில் டிஜிட்டல் முறையிலான முழு தகவல் தொடர்பு சாதனங்கள் நிறுவப்படும்.

புதிய மென்பொருள்

பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், கலவரங்களைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுண்ணறிவுப் பிரிவு மூலம் கூட்டம் கூடுவதை அறிந்து, அதனை கண்காணிக்கும் விதமாக மென்பொருள் திட்டம் ஒன்று, 76 லட்சம் ரூபாய் செலவில், சென்னையில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப கழகம் மூலம் உருவாக்கப்படும். இத்தொகை முதல் வருடத்திற்கு தொடரா

செலவினமாக வழங்கப்படும். இரண்டாம் வருடம் முதல், வருடந்தோறும் 56 லட்சம் ரூபாய் தொடர் செலவினமாக வழங்கப்படும்.

நகரும் தடுப்புகள்

ரூ.3 கோடி செலவில், சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டி 2000 நகரும் தடுப்புகள் வாங்கப்பட்டு, சென்னை மாநகரம் உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் காவல்துறையின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும்.

உட்சுற்று கண்காணிப்பு

காவல் நிலைய செயல்பாட்டை கண்காணிப்பதற்காக 475 காவல் நிலையங்களுக்கு இணையதள முறைமை கேமராவுடன் கூடிய உட்சுற்று கண்காணிப்பு தொலைக்காட்சி சாதனங்கள் ரூ.14.25 கோடியில் வாங்கப்படும். ரூ. 3.15 கோடி ரூபாய் செலவில், 105 காவல் நிலையங்களுக்கு, இணையதள முறைமை கேமராவுடன் கூடிய உட்சுற்று கண்காணிப்பு தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.




Leave a Reply