BREAKING NEWS

காவல்துறையின் தாக்குதல் காட்டு மிராண்டித்தனமானது – தலைவர்கள் கடும் கண்டனம்.

காவல்துறையின் தாக்குதல் காட்டு மிராண்டித்தனமானது – தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை, மே 22-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது காட்டுமிராண்டித்தனமானது என்று பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று அந்த மாவட்ட மக்கள் அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினர், போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தி.க. தலைவர் கி.வீரமணி:

தமிழக அரசு முன்கூட்டியே மக்கள் பிரதிநிதிகளிடம் பேசி, சுமுகத் தீர்வு கண்டிருக்க வேண்டாமா? மக்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருவர் மரணமடைந்தனர். இது கண்டிக்கத்தக்கது. இந்த உயிர்ப்பலிகளால் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடக்கும் போராட்டம் ஓயப்போவதில்லை. மத்திய, மாநில அரசுகள் மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்

நீண்ட நாட்களாக தொடர்ந்து ஸ்டர்லைட் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருவதை அரசு கண்டு கொள்ளவில்லை. அரசின் அலட்சியத்தாலே துப்பாக்கி சூடு வரை சென்றுள்ளது. பேரணி பற்றி முன்பே அறிந்த காவல்துறை, எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது. தூத்துக்குடியில் நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு உளவுத்துறையின் தோல்விதான் முழு காரணம். எனவே, ஸ்டர்லைட் ஆலையை அரசு உடனடியாக மூட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, அமைதியாக போராட்டம் நடைபெற்ற போது, காவல்துறை போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியது. மேலும், துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர். அதில் ஆறுபேர் மரணம் அடைந்துள்ளதாகவும், சிலர் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:

காவல்துறையினர் பெண்கள், குழந்தைகள் அனைவரின் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, விரட்டி அடித்துள்ளனர். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது மட்டுமல்லாமல், துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். இதில் எட்டு பேர் பலியாகியுள்ளனர். இது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல். அமைதியாகப் போராடும் மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவி விடுவதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். எனவே நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், காவல்துறை ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டம் வன்முறையாக மாறியதற்கு, அரசின் அணுகுமுறையே காரணம். தமிழக அரசு உடனடியாக போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:

காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியதால், அமைதியான போராட்டம் கலவரமாக மாறி துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் பலியான சம்பவம் வேதனை அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசும், மத்திய அரசும் செயல்படுவதை கண்டிக்கிறேன். மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலையை அ.தி.மு.க. அரசும், மத்திய அரசும் நிரந்தரமாக மூட வேண்டும்.

சமத்துவ மக்கள் தலைவர் சரத்குமார்:

ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்பு போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், அப்பகுதியை கலவர பூமியாக மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன்:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால், 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. வன்முறை வெடித்ததற்கும் காரணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளாதது தான். தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இப்பிரச்சனைக்கு நல்ல முடிவு ஏற்படுத்த வேண்டும்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்:

தடையை மீறி அமைதியாகப் பேரணி வந்தவர்களை, விரட்டுவதற்காக காவல்துறை கையாண்ட இந்த முடிவு தூத்துக்குடியையே போர்க்களமாக்கி இருக்கிறது. துப்பாக்கிச்சூட்டில் எட்டு உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்த காவலர், மாவட்ட கண்காணிப்பாளர், தென்மண்டல காவல்துறை தலைவர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன்:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் அமைதியாகப் போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள். அரசின் அலட்சியமே அனைத்துத் தவறுகளுக்கும் காரணம். இதில் மக்கள் குற்றவாளிகள் இல்லை. அவர்கள் எப்போதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால், இப்போது ஆணையினால். அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, போராடிய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதின் விளைவாக 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களுக்கு அழிவை ஏற்படுத்துகிற ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குப் பதில், மக்களைக் கொன்றுக் குவிக்கும் தமிழக அரசின் செயல் கொடுமையானது. இந்த நச்சு ஆலையை இழுத்து மூடும் வரை, மக்கள் போராட்டம் தொடர வேண்டிய நிலையை ஏற்படுத்த வேண்டாம் என மத்திய – மாநில அரசுகளை எச்சரிக்கிறேன்.




Leave a Reply