BREAKING NEWS

காவரி ஆணையத்தின் உத்தரவுப்படி எந்தெந்த மாதங்களில் எத்தனை டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் – சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனசாமி விளக்கம்.

 

காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி, எந்தெந்த மாதங்களில் எத்தனை டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கும் அளித்தார்.

சட்டசபையில் நேற்று எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசுகையில், ‘ காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி கேள்வி எழுப்பினார்.

அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-

எவ்வளவு தண்ணீர்

எதிர்கட்சித்து துணைத் தலைவர் , அவை நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு வினாவை எழுப்பினார்கள். இந்த மாதத்திற்கு தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் கிடைக்கும் என்ற அந்த விவரத்தை முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று கேட்டார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, மத்திய அரசால் காவேரி மேலாண்மை ஆணையம், காவேரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் அமைக்கப்பட்டு, முதல் கூட்டம் புதுடில்லியிலே காவேரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் தலைமையிலே இன்றைக்கு நடைபெற்றது. சுமார் நான்கு மணி நேரம் அந்த கூட்டம் நடைபெற்றது.

சிறப்புமிக்க தருணம்

நான்கு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திலே, இன்றையதினம் இந்த ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன். இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, அப்படி வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆணையத்தின் வாயிலாக இன்றைக்கு ஒரு நல்ல தீர்வு எட்டப்பட்டு, நம்முடைய மாநிலத்திற்கு இந்த மாதம், ஜூலை மாதம், வழங்க வேண்டிய நீரின் அளவு 31.24 டிஎம்சி, அதை இந்த மாதம் வழங்க வேண்டும் என்று காவேரி மேலாண்மை ஆணையத்தில் முடிவு எடுக்கப்பட்டு இன்றைக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஆணையம் ஆணை

காவேரி நீர் முறைப்படுத்தும் குழு, கர்நாடக அணையில் உள்ள நீர் இருப்பினை கருத்தில் கொண்டு நீரை விடுவிக்க ஆணையம் ஆணையிட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாதவாரியாக நமக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கும். ஒவ்வொரு 10 தினங்களுக்கு ஒருமுறை கணக்கிட்டு, அந்த கணக்கின்படி அணைக்கு எவ்வளவு நீர் வருகின்றதோ, கர்நாடகத்திற்கு எவ்வளவு நீர் வருகிறதோ, அந்த நீரை நமக்கு பகிர்ந்தளிப்பார்கள் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு சாதனை. ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நமக்கு கிடைக்க வேண்டும். அதாவது, ஜூன் மாதம் நமக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு 9.19 டிஎம்சி., 11 டிஎம்சி நீர் வந்திருக்கிறது.

31.24 டிம்எசி

நமது அணைக்கு வந்திருக்கிறது. ஜூலை மாதத்தை பொறுத்தவரைக்கும், 31.24 டிம்எசி, தண்ணீர் நமக்கு கர்நாடக அரசால் வழங்கப்பட வேண்டும். அதை இந்த ஆணையம் உறுதி செய்து இருக்கிறது. இந்த ஜூலை மாதத்திற்குள் நமக்கு கர்நாடக அரசு அவர்களுடைய அணையிலிருந்து 31.24 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஆணையம் ஆணையிட்டு இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை அவையிலே தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஒரு கருத்தை சொன்னார், “42 டிஎம்சி இந்த மாதம், எனக்கு ஞாபகம் இருந்தால், சரியாக இருந்தால் 42 டிஎம்சி வழங்க வேண்டும்” என்று ஒரு கருத்தை சொன்னார். இல்லை, ஜூலை மாதத்தை பொறுத்தவரைக்கும், நம்முடைய மாநிலத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய நீரினுடைய அளவு 31.24 டிஎம்சி தான்.

மாதத்தில் தண்ணீர்…

அதனால், பக்கத்தில் உள்ள அண்டை மாநிலத்திற்கும் கொடுக்க வேண்டும், அதனை சேர்த்து தான் 31.24 டிஎம்சி, இன்றைக்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்ற ஒரு அறிவிப்பை தந்திருக்கிறது, ஆணையம் கட்டளையிட்டிருக்கிறது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரைக்கும், 45.95 டிஎம்சி, செப்டம்பர் மாதம் 36.76 டிஎம்சி, அக்டோபர் மாதம் 20.22 டிஎம்சி, நவம்பர் மாதம் 13.78 டிஎம்சி, டிசம்பர் மாதம் 7.35 டிஎம்சி, ஜனவரி மாதம் 2.76 டிஎம்சி, பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 2.50 டிஎம்சி. ஆக மொத்தம், 177.25 டிஎம்சி, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு நம்முடைய தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

அதை காவேரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டு அந்த ஆணையத்தை காவேரி நீர் முறைப்படுத்தும் குழு நடைமுறைப்படுத்தும் என்பதை தங்கள் வாயிலாக எதிர்கட்சித் துணைத் தலைவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்




Leave a Reply